தெலுங்கானா மந்திரியின் சர்ச்சை பேச்சு: ராகுல்காந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் - நடிகை அமலா


தெலுங்கானா மந்திரியின் சர்ச்சை பேச்சு: ராகுல்காந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் - நடிகை அமலா
x

தெலுங்கானா மந்திரியின் சர்ச்சை பேச்சு குறித்து ராகுல்காந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை அமலா கூறியுள்ளார்.

ஐதராபாத்,

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா. இவர் 2017-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஒரு சில காரணத்தால் விவாகரத்து பெற்று பிரிந்தார். கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக அவர்கள் அறிவித்தாலும், சரியான காரணத்தை வெளிப்படையாக கூறவில்லை. அதன் பிறகு நாக சைதன்யா தற்போது நடிகை சோபிதா துளிபாலா என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். நிச்சயதார்த்தமும் சில மாதங்களுக்கு முன் நடந்து முடிந்தது.

இதற்கிடையே சமந்தா - நாகசைதன்யா விவாகரத்துக்கு பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்) கட்சியின் செயல் நிர்வாக தலைவரும், முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகரராவ்வின் மகனுமான கே.தாரக ராமாராவ்தான் காரணம் என்று கூறி தெலுங்கானா மந்திரி கொண்டா சுரேகா சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

மந்திரி சுரேகாவின் இந்த சர்ச்கையான பேச்சிற்கு நடிகர் நானி, நாக சைதன்யா மற்றும் நாகார்ஜுனா உள்ளிட்டோர் தங்களின் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகை அமலா வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு பெண் மந்திரி தீய கற்பனைகளை குற்றச்சாட்டுகளாக கற்பனை செய்து வெளியிட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். மந்திரி, என் கணவர் (நாகார்ஜூனா) பற்றி ஒரு துளிகூட வெட்கமோ உண்மையோ இல்லாமல் பேசியது வெட்கக்கேடானது. தலைவர்கள் தங்களை சாக்கடையில் தாழ்த்திக் கொண்டு குற்றவாளிகளைப் போல் நடந்து கொண்டால், நம் நாட்டின் கதி என்ன?

ராகுல் காந்திஜி, நீங்கள் மனித நேயத்தில் நம்பிக்கை கொண்டால், தயவுசெய்து உங்கள் அரசியல்வாதிகளைக் கட்டுப்படுத்தி, எனது குடும்பத்திடம் மன்னிப்புக் கேட்டு உங்கள் மந்திரியின் விஷமத்தனமான அறிக்கைகளைத் திரும்பப் பெறச் செய்யுங்கள்" என்று கூறியுள்ளார்.


Next Story