நடிகர் விஷாலுக்கு எதிராக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை!


நடிகர் விஷாலுக்கு எதிராக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை!
x

நடிகர் விஷாலை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினை கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என அறிக்கையில் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை,

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் கடந்த 2017 முதல் 2019 ம் ஆண்டு வரை தலைவராக இருந்த நடிகர் விஷால் சங்க நிதியை முறைகேடாக செலவழித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக சங்க நிதியை முறைகேடாக செலவழித்தது தொடர்பான விவகாரத்தில் நடிகர் விஷாலுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எவ்வித ஒத்துழைப்பும் வழங்காது என தீர்மானம் நிறைவேற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

விஷாலின் மீது எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 2019ம் ஆண்டில் தமிழ்நாடு அரசு, தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தனி அதிகாரியை நியமித்திருந்தது. அந்த தனி அதிகாரி, சங்கத்தின் கணக்கு வழக்குகளை சரி பார்க்க வேண்டும் என ஸ்பெஷல் ஆடிட்டரை நியமித்திருந்தார். அந்த ஸ்பெஷல் ஆடிட்டர் கணக்கு வழக்குகளை சரிபார்த்து கொடுத்துள்ள அறிக்கையில் சங்கத்தில் இருந்த நிதி தவறான முறையில் பயன்படுத்தப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் சங்கத்தின் வங்கிக் கணக்கில் ஏற்கனவே வைப்பு நிதியாக இருந்த 7 கோடி 50 லட்சமும் 2017 முதல் 19 ஆம் ஆண்டுகளில் வரவு மற்றும் செலவு 5 கோடியும் சேர்த்து சுமார் 12 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இவ்வாறு முறைகேடாக செலவழிக்கப்பட்ட பணத்தை நடிகர் விஷால் திரும்ப கொடுக்க வேண்டும் என பலமுறை தெரிவித்தும் அவர் இதுநாள் வரை எந்தவித பதிலும் கொடுக்காமல் இருப்பதனால் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழுவின் பரிந்துரையின் படி இனிவரும் காலங்களில் நடிகர் விஷாலை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினை ஆலோசித்த பின் தங்களது பணிகளை துவங்க வேண்டும் என அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளனர்.


Next Story