டிஜிட்டலுக்கு மாற்றம்: கமலின் 'நாயகன்' படம் மீண்டும் ரிலீஸ்
கமல்ஹாசன் நடித்த 'நாயகன்' திரைப்படத்தை டிஜிட்டலுக்கு மாற்றி ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
உலகநாயகன் கமல்ஹாசன் 'விக்ரம்' படத்துக்கு பிறகு, நாக் அஷ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் 'கல்கி' படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோனே, துல்கர் சல்மான், திஷா பதானி என பெரும் நட்சத்திர பட்டாளங்களே நடிக்கிறார்கள்.
கமல்ஹாசன் தனது 69-வது பிறந்தநாளை அடுத்த மாதம் (நவம்பர்) 7-ந்தேதி கொண்டாட இருக்கிறார். இதையொட்டி, கமல்ஹாசன் நடித்த 'நாயகன்' திரைப்படத்தை டிஜிட்டலுக்கு மாற்றி ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
'நாயகன்' படம் மீண்டும் திரையிடப்படுவது குறித்து வினியோகஸ்தர் மதுராஜ், நடிகர் அரீஷ்குமார் ஆகியோர் கூறுகையில், "ஏற்கனவே கமல்ஹாசன் நடித்த 'வேட்டையாடு விளையாடு' படம் ரீ-ரிலிஸ் செய்யப்பட்டது. தற்போது கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் 3-ந்தேதி 'நாயகன்' படத்தை டிஜிட்டலுக்கு மாற்றி ரீ-ரிலீஸ் செய்யவுள்ளோம். தமிழ்நாட்டில் மட்டும் 120 தியேட்டர்களில் படம் வெளியாக இருக்கிறது'', என்றனர்.
1987-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவான இந்த படம் மிகப்பெரிய தாக்கத்தை சினிமாவில் ஏற்படுத்தியது. மேலும் சிறந்த நடிப்புக்காக கமல்ஹாசனுக்கு தேசிய விருதும் கிடைத்தது. ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர் பிரிவிலும் தேசிய விருதுகள் கிடைத்தன.
இது கமல்ஹாசன் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.