400 ஆண்டுகள் பழமையான குலதெய்வ கோவிலில் நடைபெற்ற சித்தார்த்-அதிதி நிச்சயதார்த்தம்
தனக்கும், சித்தார்த்துக்கும் 400 ஆண்டுகள் பழமையான குலதெய்வ கோவிலில் வைத்து நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக நடிகை அதிதி தெரிவித்துள்ளார்.
மும்பை,
நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவும் காதலித்து வருவதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இரு தரப்பிலும் இதை மறுக்கவோ, ஏற்கவோ இல்லை. இருவரும் பொது நிகழ்ச்சிகளிலும் ஒன்றாகவே பங்கேற்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.
இதனிடையே இருவரும் சமீபத்தில் தங்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் அறிவித்தனர். இருவரும் தங்கள் விரல்களில் நிச்சயதார்த்த மோதிரம் அணிந்திருந்த புகைப்படத்தை வெளியிட்டனர். இவர்களின் நிச்சயதார்த்தம் மிக எளிமையாக குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்றதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், தங்கள் நிச்சயதார்த்தம் 400 ஆண்டுகள் பழமையான குலதெய்வ கோவிலில் வைத்து நடைபெற்றதாக நடிகை அதிதி ராவ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டி ஒன்றில் பேசியபோது அவர் கூறியதாவது;-
"எங்கள் வாழ்க்கையின் புதிய தொடக்கத்தை 400 ஆண்டுகள் பழமையான எங்களுடைய குலதெய்வ கோவிலில் வைத்து தொடங்க வேண்டும் என்று விரும்பினேன். அங்கு சென்று பூஜை செய்து, எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டோம். எங்கள் திருமணம் குறித்து பல்வேறு வதந்திகள் வந்து கொண்டிருந்ததால், எனது அம்மாவின் அறிவுறுத்தலின்பேரில் நானும், சித்தார்த்தும் இன்ஸ்டாகிராம் மூலம் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதை அறிவித்தோம்."
இவ்வாறு நடிகை அதிதி ராவ் தெரிவித்துள்ளார்.