வெடிகுண்டு வெடிக்கும் காட்சியை படமாக்கும் போது விபத்து - நடிகர் சஞ்சய் தத் காயம்


வெடிகுண்டு வெடிக்கும் காட்சியை படமாக்கும் போது விபத்து - நடிகர் சஞ்சய் தத் காயம்
x

'கேடி - தி டெவில்' திரைப்படத்தின் படப்பிடிப்பில் வெடிகுண்டு வெடிக்கும் காட்சியை படமாக்கும் போது ஏற்பட்ட விபத்தில் நடிகர் சஞ்சய் தத் காயமடைந்தார்.

சென்னை,

இயக்குனர் பிரேம் இயக்கத்தில் துருவா சர்ஜா நடித்துள்ள திரைப்படம் 'கேடி - தி டெவில்'. காளி என்ற கதாபாத்திரத்தில் துருவா நடிக்கும் இந்த படத்தை கே.வி.என். புரொடக்சன் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

1970-களில் பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் ரவிச்சந்திரன், சஞ்சய் தத் மற்றும் ஷில்பா ஷெட்டி குந்த்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பெங்களூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் படப்பிடிப்பின் போது வெடிகுண்டு வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்ட போது படப்பிடிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் டம்மி குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. இதில், எதிர்பாராத விதமாக, டம்மி குண்டு சற்று வீரியத்துடன் வெடித்ததில் நடிகர் சஞ்சய் தத்துக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதில் சஞ்சய் தத்தின் முழங்கை, கை மற்றும் முகத்தில் காயங்கள் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மும்பைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள மாகடி சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சஞ்சய் தத், நடிகர் விஜய்யின் 'லியோ' படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story