டிக்கெட் விலையில் ரூ.5 ராமர் கோவிலுக்கு வழங்கப்படும்: ஹனு-மான் பட விழாவில் சிரஞ்சீவி அறிவிப்பு
சமீபத்தில் ஹனுமான் படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது.
ஐதராபாத்,
இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் 'ஹனு-மான்'. இதில் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடிக்கிறார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், கெட்டப் சீனு, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தாசரதி சிவேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கௌரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ண சவுரப் என மூன்று இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்துள்ளனர். இந்த படத்தை ப்ரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.நிரஞ்சன் ரெட்டி தயாரித்துள்ளார்.
இந்த படம் மே 12-ம் தேதி தெலுங்கு, இந்தி, மராத்தி, தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இந்நிலையில் இந்த படம் பொங்கலை முன்னிட்டு நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சமீபத்தில் இந்த படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மெகாஸ்டார் சிரஞ்சீவி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துக் கொள்ள தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் குடும்பத்துடன் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் ஹனு-மான் திரைப்படத்திற்கு விற்பனையாகும் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் 5 ரூபாயை ராமர் கோயிலுக்கு வழங்க படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் படக்குழு சார்பில் தான் இதை அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.