உன்னி முகுந்தனின் 'மார்கோ' படத்தில் இணைந்த ரியாஸ் கான்


உன்னி முகுந்தனின் மார்கோ படத்தில் இணைந்த ரியாஸ் கான்
x

மலையாள நடிகர் உன்னி முகுந்தனின் 'மார்கோ' படப்பிடிப்பில் நடிகர் ரியாஸ் கான் இணைந்துள்ளார்.

சென்னை,

நடிகர் உன்னி முகுந்தன் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில் இவர் நடிப்பில் வெளியான மாளிகப்புரம் திரைப்படமும் கேரள ரசிகர்களையும் தாண்டி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. அதேசமயம் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் நடித்து வருபவர். அந்த வகையில் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான சீடன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் சூரி நடிப்பில் வெளியான கருடன் திரைப்படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் உன்னி முகுந்தன்.

அடுத்ததாக உன்னி முகுந்தன் நடிப்பில் 'மார்கோ' எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை ஹனீப் அடேனி இயக்குகிறார். படத்திற்கு சந்துரு செல்வராஜ் ஒளிப்பதிவு செய்ய கே ஜி எப், சலார் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த ரவி பஸ்ரூர் இதற்கு இசை அமைத்துள்ளார். சமீர் முகமது படத்தின் எடிட்டிங் பணிகளை கவனித்திருக்கிறார். ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு மூணாறு போன்ற பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், பிரபல நடிகர் ரியாஸ் கான் 'மார்கோ' படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இது குறித்து நடிகர் உன்னி முகுந்தன் தன்னுடைய எக்ஸ் தளபக்கத்தில் ரியாஸ் கானை வரவேற்கும் விதமாக வீடியோ ஒன்றை நேற்று பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், 'அடிச்சு கெரி வா' என்ற பிரபலமான உரையாடலுடன் அவரது நுழைவு இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தப்படத்தில் கபீர் துஹான் சிங், அபிமன்யு, அன்சன் பால், சித்திக் மற்றும் ஜெகதீஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.


Next Story