விஜய், சீமானுடன் இணைந்து பணியாற்ற தயார் - இயக்குனர் அமீர்


விஜய், சீமானுடன் இணைந்து பணியாற்ற தயார் - இயக்குனர் அமீர்
x

விஜய் மற்றும் சீமான் ஆகிய இருவருடன் இணைந்து அரசியல் பயணம் செய்வதற்கு தயாராக உள்ளதாக இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

திருச்சி,

தமிழ் சினிமா கலைஞர்களில் ஒரு சில கலைஞர்கள் மட்டுமே அரசியல் குறித்தும் சமூகம் குறித்தும் மிக தைரியமாக எல்லா காலகட்டத்திலும் பேசக்கூடியவர்களில் இயக்குநர் அமீரும் ஒருவர்.

திருச்சியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "கிராமங்கள் என்பது இந்தியாவின் முதுகெலும்பு ஆகும். ஆகையால் திரைத்துறையில் கிராமத்தை தவிர்த்து விட்டு எந்த படமும் எடுக்க இயலாது. அரசியலில் அனைவரும் இருக்க வேண்டும். தற்போது இருக்கும் நெருக்கடி சூழ்நிலையில் அரசியலுக்கு வந்தாலும் வரலாம். அதுதான் எனக்கு உள் உணர்வு சொல்கிறது" என்றார்.

விஜய் அல்லது சீமான் இவர்களில் யாருடன் அரசியலில் பயணம் செய்ய உள்ளீர்கள் என கேள்விக்கு "விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன். விஜய் என்னை அழைத்தால் நிச்சயம் நான் செல்வேன். விஜய் உடன் சீமான் இணைந்து செயல்பட உள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். என்னை பொறுத்தவரை விஜய் மற்றும் சீமான் ஆகிய இருவருடன் இணைந்து அரசியல் பயணம் செய்வதற்கு நான் தயாராக உள்ளேன்." என அவர் கூறினார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது என்ற கேள்விக்கு "அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கினால் எனக்கு மகிழ்ச்சி. சட்ட ஒழுங்கு என்பது மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் சரியாக தான் உள்ளது. ஆளும் கட்சியை எதிர்த்து, அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகள் சட்ட ஒழுங்கை பற்றி மட்டுமே கூற முடியும். தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்பது பேசுவது ஒரு அரசியலாகும். " என அவர் கூறினார்.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர்சாதிக்கு, ஜாமீன் வழங்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த வழக்கை பற்றி எனக்கு முழுமையாக தெரியாது. நீதிமன்றத்தில் நீதியரசர் விசாரணையில் எந்த முகாந்திரமும் இல்லாமல் இருப்பதாக தெரியவந்தது. ஆகையால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாக தெரிகிறது. மற்றபடி எனக்கு இந்த வழக்கை பற்றி எதுவும் தெரியாது என்றார்.


Next Story