'வாழை' திரைப்படம்: சிறந்த இயக்குநர் மாரி செல்வராஜ் - ரஜினிகாந்த் பாராட்டு


வாழை திரைப்படம்: சிறந்த இயக்குநர் மாரி செல்வராஜ் - ரஜினிகாந்த் பாராட்டு
x

‘வாழை’ திரைப்படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த் அப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜூக்கு தன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

சென்னை,

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாழை. மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியுள்ளார். மேலும் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, 'வெயில்' படம் மூலம் பிரபலமான பிரியங்கா மற்றும் சில சிறுவர்கள் நடித்துள்ளனர். சமீபத்தில், 'வாழை' படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி கவனம் பெற்றன. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தன்னுடைய வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து வாழை படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். மேலும், இந்த படத்திற்கு பல பிரபலங்கள் மற்றும் இயக்குனர்கள் மாரி செல்வராஜுக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் 'வாழை' படத்தை பாராட்டி ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில், ' மாரி செல்வராஜினுடைய வாழை படம் பார்த்தேன். ஒரு அற்புதமான, தரமான படம் தமிழில் நீண்ட நாளுக்குப் பிறகு வந்துள்ளது. மாரி செல்வராஜ் தன்னுடைய இளமை பருவத்திற்கே நம்மை அழைத்து சென்றிருக்கிறார். அதில் அந்த பையன் அனுபவிக்கும் துன்பங்கள், கஷ்டங்கள் அதை நாமே அனுபவிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. கிளைமாக்ஸில் அந்த பையன் பசியை தாங்காமல் அலையும் போது, அந்த தாய் என் பையனுக்கு ஒரு கைசோறு சாப்பிடவிடவில்லையே என்று கதறும்போது, நமது நெஞ்சமெல்லாம் துடிக்கின்றது.மாரி செல்வராஜ் தான் ஒரு தலைசிறந்த இயக்குனர் என்பதை இந்த படத்தின் முலம் நிரூபித்திருக்கிறார்.மாரி செல்வராஜுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துக்களும் ' என ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.


Next Story