'ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர். படம் அற்புதமாக இருந்தது' - ஜேம்ஸ் கேமரூன் பாராட்டு
நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருதை வென்றபோதும் ராஜமவுலியை ஜேம்ஸ் கேமரூன் பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை,
டெர்மினேட்டர், டைட்டானிக், அவதார் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களை இயக்கியதன் மூலம் உலகளவில் பிரபலமடைந்தவர் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன். இவர் இயக்கிய அவதார் படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியான நிலையில் ஏழு பாகங்கள் வரை இயக்க அவர் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் இந்திய படங்களை ஜேம்ஸ் கேமரூன் பாராட்டி உள்ளார். மேலும் அவர் அவதார் படங்கள் குறித்து வெளியான தகவல்களையும் உறுதிப்படுத்தினார்.இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "நான் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு இயக்குனரை பார்த்து வியக்கிறேன். புதிய இயக்குனர்களுக்கு வரும் புதுமையான எண்ணங்கள் எனக்கு ஏன் வருவதில்லை என்று வருத்தப்பட்டதும் உண்டு.
கடந்த வருடம் ராஜமவுலியின் ஆர் ஆர் ஆர் படம் பார்த்தேன். அற்புதமாக இருந்தது. பிரமாதமாக எடுத்து இருந்தார். உலக அரங்கில் இந்திய சினிமா உயர்வான இடத்தை பிடித்து வருகிறது. 'அவதார்' படத்தின் ஐந்து பாகங்களுக்கான கதையை எழுதி விட்டோம். இதை ஏழு பாகங்கள் வரை எடுக்க திட்டம் உள்ளது'' என்றார்.
ஆர் ஆர் ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருதை வென்றபோதும் ராஜமவுலியை ஜேம்ஸ் கேமரூன் பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.