'மஞ்சுமெல் பாய்ஸ்', 'பிரேமலு' வரிசையில் 'ஆடுஜீவிதம்': 9 நாட்களில் ரூ.100 கோடி - மிரட்டும் மலையாள சினிமா
ஆடுஜீவிதம் திரைப்படம் ரூ.100 கோடி வசூலை ஈட்டியுள்ளது.
திருவனந்தபுரம்,
மலையாள எழுத்தாளர் பென்யமின் எழுதிய புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் 'ஆடு ஜீவிதம்'. இயக்குனர் பிளஸ்சி இயக்கியுள்ள இந்த படத்தில் பிருத்விராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். அமலாபால் நாயகியாக நடித்துள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் கடந்த 28-ம் தேதி வெளியானது.
'ஆடு ஜீவிதம்' திரைப்படம் முதல் நாளில் இந்திய பாக்ஸ் ஆபீசில் ரூ.7.60 கோடிக்கும் மேலாக வசூல் செய்து, மிகப்பெரிய தொடக்கத்தை பெற்ற மலையாளப் படத்தில் ஒன்றாக அமைந்துள்ளது. 'ஆடு ஜீவிதம்' படத்தின் மலையாளப் பதிப்பு ரூ.6.50 கோடிக்கு மேலாகவும், தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி மொழி பதிப்பு ரூ.1 கோடிக்கு மேலாகவும் வசூல் செய்தது.
இரண்டாவது நாளில் ரூ. 6.50 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்நிலையில், இப்படம் ரூ.100 கோடி வசூலை ஈட்டியுள்ளது. கடந்த மாதம் 28-ம் தேதி வெளியாகி 9 நாட்களில் ரூ.100 கோடி என்ற இலக்கை எட்டியுள்ளது. முன்னதாக மஞ்சுமெல் பாய்ஸ், பிரேமலு உள்ளிட்ட சில திரைப்படங்கள் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்த படமாக இருந்தன. இதன் மூலம் இந்த வரிசையில் 'ஆடு ஜீவிதம்' திரைப்படமும் இணைந்துள்ளது.
இவ்வாறு மலையாள படங்கள் வரிசையாக அடுத்தடுத்து வெளியாகி ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து மிரட்டி உள்ளது. 'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படம், உலகளவில் ரூ.212 கோடிக்கும் மேல் வசூல் செய்த மலையாளப் படமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.