'அதைத்தான் நானும், துல்கர் சல்மானும் செய்து வருகிறோம்' -நடிகர் பிருத்விராஜ்
நடிகரின் வாரிசு என்பதற்காக முதல் படத்தில் மட்டும்தான் சுலபமாக வாய்ப்பு கிடைக்கும் என்று பிருத்விராஜ் கூறினார்.
சென்னை,
மலையாள நடிகரான பிருத்விராஜ் தமிழில் கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும், காவிய தலைவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் பிரபல மலையாள நடிகரும் தயாரிப்பாளருமான சுகுமாரன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகரின் வாரிசு என்பதால் படவாய்ப்புகள் வருகின்றன என்று விமர்சனங்கள் கிளம்பின.
இதுகுறித்து பிருத்விராஜ் அளித்த பேட்டியில், ''நானும் நடிகர் துல்கர் சல்மானும் நடிகரின் வாரிசுகள் என்ற அடையாளத்தோடு சினிமாவுக்கு வந்தவர்கள்தான். வாரிசுகள் என்பதால் சினிமா படவாய்ப்பு எளிதாக கிடைத்தது.
எனது தந்தையின் பெயரை பார்த்தே முதல் படவாய்ப்பை கொடுத்தனர். எனக்கு ஸ்கிரீன் டெஸ்ட் கூட எடுக்கவில்லை. சினிமா பின்னணி இல்லாதவர்களுக்கு இப்படி சுலபமான படவாய்ப்பு கிடைக்காது.
நான் பிரபல நடிகர் மகன் என்பதால் தொடர்ந்து நல்ல படவாய்ப்புகள் வரும் என்று பலரும் பேசினார்கள். நடிகரின் வாரிசு என்பதற்காக முதல் படத்தில் மட்டும்தான் சுலபமாக வாய்ப்பு கிடைக்கும். அதன்பிறகு உழைக்க வேண்டும். வந்த எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தி உழைத்தால்தான் நிலைக்க முடியும். அதைத்தான் நானும், துல்கர் சல்மானும் செய்து வருகிறோம்'' என்றார்.