அரசியல் வருகை; அதற்கான நேரத்தில் முடிவு செய்வேன் - நடிகர் விஷால் பேட்டி
அரசியலுக்கு வருவது அந்த காலகட்டத்தில் எடுக்கக்கூடிய முடிவுதான் என்று நடிகர் விஷால் தெரிவித்தார்.
சென்னை,
நடிகர் விஜய் 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்றும் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் தெரிவித்துள்ள அவர், 2026 சட்டமன்ற தேர்தலில் முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார்.
இதனிடையே நடிகர் விஜய்யை தொடர்ந்து நடிகர் விஷாலும் அரசியலுக்கு வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் சென்னையில் இன்று நடிகர் விஷால் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"அரசியல் என்பது பொதுப்பணி. அது ஒரு சமூக சேவை. சினிமா துறை மற்றும் பிற துறைகளைப் போல் அரசியல் என்பது ஒரு துறை கிடையாது. பொழுதுபோக்குக்காக வந்துவிட்டுப் போகும் இடமும் கிடையாது. மக்களுக்கு என்ன தேவையோ அதை செய்வதே அரசியல்.
தமிழகத்தில் 2026-ல் தேர்தல் வருகிறது. நான் அரசியலுக்கு வருகிறேன், வரவில்லை என்று சொல்வதற்கோ, அல்லது மறைப்பதற்கோ எதுவுமில்லை. அதேபோல் வருகிறேன் என்று சொல்லிவிட்டு வராமல் இருக்கவும் மாட்டேன். அந்த நேரத்தில், அந்த காலகட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்படுமோ அதுதான்.
நான் நடிகர் சங்க தேர்தலில் பொதுச்செயலாளர் ஆவேன் என்று நினைத்ததே கிடையாது. ராதாரவிக்கு போட்டியாக நிற்பேன் என்றும் நினைத்தது கிடையாது. இது எல்லாம் அந்த காலகட்டத்தில் எடுக்கக்கூடிய முடிவுதான். எனவே அதற்கான நேரத்தில் இந்த கேள்விகளைக் கேட்டால் சரியானதாக பதில் கிடைக்கும்."
இவ்வாறு நடிகர் விஷால் தெரிவித்தார்.