நடிகை நமிதா வீட்டில் புகுந்தது வெள்ளம்: இரண்டு குழந்தைகளுடன் சிக்கி தவிப்பு என தகவல்
அதிக அளவு நீர் காரணமாக பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியின் கரை உடைந்தது.
சென்னை,
மிக்ஜம் புயல் காரணமாக நேற்று முன் தினம் மாலையிலிருந்து நேற்று இரவுவரை சென்னையில் விடாது மழை கொட்டி தீர்த்தது. கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக சென்னை முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது.
அரங்கநாதன் சப் வே, தி.நகர் சப் வே, அம்பத்தூர், சூளைமேடு, வளசரவாக்கம், அண்ணா நகர் என எங்கும் வெள்ளக்காடாகவே காட்சியளித்தது.
குறிப்பாக பள்ளிக்கரணை லேக் வியூ அப்பார்ட்மெண்ட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகின. புறநகர் பகுதிகளான கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகர், உதயசூரியன் நகர், அமுதன் காலனி போன்ற பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புகளை மழைவெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
பூவிருந்தவல்லி நசரத்பேட்டை பகுதியில் உள்ள யமுனா நகர், அன்பரசன் நகர் பகுதியில் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். கனமழையால் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில் அதிக அளவு நீர் காரணமாக பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியின் கரை உடைந்தது. இதனால் அதற்கு அருகில் இருக்கும் குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. பள்ளிக்கரணை, அதன் அருகில் உள்ள துரைப்பாக்கம் பகுதியில் வெள்ளம் சூழ்ந்திருக்கிறது.
குறிப்பாக துரைப்பாக்கம் எக்ரட் பார்க் குடியிருப்பிலும் வெள்ளம் புகுந்து ஆறு அடி அளவில் தண்ணீர் நிற்கிறது. அந்த குடியிருப்பில்தான் நடிகை நமிதா தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்துவருகிறார். குழந்தைகளுக்கு ஒரு வயது ஆகிறது. மீட்பு குழுவினர் இன்னும் அங்கு செல்லாததால் நமிதா உட்பட பலரும் தவித்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குடியிருப்பு பகுதிகளில் வயதானவர்கள் சிக்கி கொண்ட நிலையிலும் உதவிக்கு ஒருவரும் வரவில்லை என புகார்கள் எழுந்துள்ளன.