ஆவணப்படத்துக்கு ஆஸ்கார் விருது... "பிள்ளைகளைபோல யானைகளை பராமரித்ததற்கு கிடைத்த விருது" - நீலகிரி பாகன் தம்பதி நெகிழ்ச்சி


ஆவணப்படத்துக்கு ஆஸ்கார் விருது... பிள்ளைகளைபோல யானைகளை பராமரித்ததற்கு கிடைத்த விருது - நீலகிரி பாகன் தம்பதி நெகிழ்ச்சி
x

‘தி எலிபண்ட் விஸ்பரரஸ்’ (The Elephant whisperers) ஆவணப்படம், சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கார் விருது வென்று அகில உலக சினிமா துறையினரின் இதயங்களில் எல்லாம் இடம் பிடித்தது. மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த படம் ஆஸ்கார் விருதை பெறுவதற்கு கதையும்....கதைக்கான களமும்தான் காரணம் என்கின்றனர்...

சினிமா என்றாலே நடிப்பு என்றாலும், நடிப்பிலும் நிஜத்தை சொல்லும் பாத்திரங்கள் இந்த படத்தின் உயிரோட்டம். ஏறத்தாழ படத்தில் நடித்த பொம்மன்-பெள்ளி தம்பதியின் வாழ்க்கையே ஆவணப்படம்போல எடுக்கப்பட்டதுதான் இந்தக் கதையும். யானை மற்றும் பாகனுக்கு இடையே நிலவும் உணர்வுப்பூர்வமான காட்சிகள் படமாக்கப்பட்டு இருந்தன.

2 ஆண்டுகளாக எடுக்கப்பட்ட இந்த ஆவணப்படம் ஆஸ்கரை சூடி, ஆதரவற்ற யானைகளையும், அதன்பின்னால் ஓடும் பாகன்களின் வாழ்க்கையையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

விருது வென்றதில் நடித்த பாகன் தம்பதிகளான பொம்மன்-பெள்ளி ஆகியோர் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றுள்ளனர். இதுகுறித்து பெள்ளி கூறியதாவது:-

"இன்றைக்கு உலகம் முழுவதும் எங்களைப் பற்றி பேசுகிறார்கள். பொம்மி, ரகு குட்டி யானைகளால் எங்களுக்கு பெரிய புகழ் கிடைத்து உள்ளது. பிறந்து 3 மாதங்கள் மட்டுமே ஆன பொம்மி மற்றும் ரகு குட்டிகளை காப்பாற்ற முடியாத நிலையில் கொண்டு வந்தார்கள்.

தினமும் மடியில் படுக்க வைத்து அதற்கு பால் கொடுத்து பராமரித்து வந்தோம். எனது பேரன், பேத்தியை கூட சரியாக பார்க்க போகாமல் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் குழந்தைகள் போல் வளர்த்து வந்தோம். கஷ்டப்பட்டு வளர்த்ததற்கு ஆவணப்படம் மூலம் எங்களுக்கு பாராட்டு கிடைத்து உள்ளது" என்றார்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் மின்வேலியில் சிக்கி இறந்த 3 யானைகளின் குட்டிகளை மற்ற யானைகளுடன் சேர்க்கும் பணிக்காக சென்றிருந்த பாகன் பொம்மன் நிருபர்களிடம் கூறியதாவது:-

"நான் நடித்த குறும்படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. தி எலிபண்ட் விஸ்பரரஸ் படத்தால் இந்தியாவிற்கே பெருமை கிடைத்துள்ளது. இந்த குறும்படத்தில் என்னையும், பெள்ளியையும் கணவன்-மனைவியாக நடிக்கும் படி இயக்குனர் கூறினார்.

ஆவண படம் எடுக்கும்போது நிஜமாகவே எனக்கும், பெள்ளிக்கும் காதல் மலர்ந்தது. நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். ஆவண படத்தில் நடிக்க நாங்கள் எந்த ஊதியமும் பெறவில்லை" என்றார்.

'இங்கு எடுக்கப்பட்ட ஆவணப்படத்துக்கு உயரிய விருதான ஆஸ்கார் கிடைத்திருப்பது பாகன்கள், வனத்துறையினர் மற்றும் அதிகாரிகளுக்கு கிடைத்த அங்கீகாரமாக உள்ளது. மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது' என்று முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் வித்யா கூறினார்.

படத்தில் நடித்த கிருஷ்ணகிரி குட்டி யானை

குறும்படத்தில் நடித்த ரகு என்ற ஆண் குட்டி யானை, கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை சேர்ந்ததாகும். கடந்த 2017-ம் ஆண்டு ரகுவின் தாய் பலாப்பழ தோட்டத்தில் மின்வேலியில் சிக்கி பலியானது. தாயில்லாமல் தவித்த குட்டியை மற்ற யானை கூட்டத்துடன் சேர்க்க முடியாத நிலையில் நீலகிரி முதுமலை வன விலங்கு காப்பகத்துக்கு கொண்டு வரப்பட்டது. இது ஆவணப்படத்தில் நடித்து உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ரகுவுடன், சத்தியமங்கலம் வனத்தில் தாயை பிரிந்து தவித்த 5 மாத குட்டி யானை (பொம்மி) 26.9.2019-ந்தேதி முதல் பொம்மன்-பெள்ளி தம்பதியால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

தாய்நாட்டுக்கு அர்ப்பணிக்கிறேன்

தி எலிபென்ட் விஸ்பரரஸ் ஆவணப்பட இயக்குனர் கார்த்திகி கொன்சால்வ்ஸ் கூறுகையில், "நமக்கும், இயற்கை உலகத்துக்கும் இடையே புனிதமான உறவு உள்ளது. நான் தயாரித்த ஆவணப்படத்துக்கு கிடைத்த இந்த விருதை எனது தாய்நாடான இந்தியாவுக்கு அர்ப்பணிக்கிறேன். பழங்குடி மக்களையும், விலங்குகளையும் முன்னிலைப்படுத்திய இந்த படத்தை அங்கீகரித்ததற்கு மிகவும் நன்றி." என்றார்.


Next Story