'2015ல் கூட இப்படி இல்லை, எல்லாம் தலைகீழாக மாறியுள்ளது' - சென்னை வெள்ளம் குறித்து நடிகை கீர்த்தி பாண்டியன் பதிவு
சென்னை வெள்ளம் குறித்து நடிகை கீர்த்தி பாண்டியன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை,
'மிக்ஜம்' புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பெரிதும் பாதிப்பை சந்தித்துள்ளன. சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் அரசு சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்பினர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். நகரின் பல்வேறு பகுதிகளில் தற்போதுவரை வெள்ளம் வடியவில்லை. மேலும் பல பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை வெள்ளம் குறித்து தமிழ் திரையுலகில் 80-களில் முன்னணி நடிகராக இருந்த அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் அதில், 'சென்னையின் மையப்பகுதியான டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் நான் வசிக்கும் தெருவில், 2015 மழையில் கூட தண்ணீர் தேங்கவில்லை. இப்போது எல்லாமே தலைகீழாக மாறி உள்ளது. ஏதேதோ காரணங்களுக்காக அடிக்கடி பள்ளங்கள் தோண்டியதால் தற்போது மழைநீர் தேங்கி உள்ளது.
மழை நீரோடு கழிவு நீரும் கலந்ததால் தரை தளத்தில் வசித்தவர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகளில் உள்ளவர்கள் அடிப்படை தேவைகள் மற்றும் வசதிகளை பெற வெளியில் செல்ல முடியாத நிலை உள்ளது. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார்.