நாங்குநேரி சம்பவம்: இயக்குனர்கள் மாரி செல்வராஜ், மோகன் ஜி கண்டனம்


நாங்குநேரி சம்பவம்: இயக்குனர்கள் மாரி செல்வராஜ், மோகன் ஜி கண்டனம்
x
தினத்தந்தி 12 Aug 2023 12:18 AM IST (Updated: 12 Aug 2023 4:28 PM IST)
t-max-icont-min-icon

நாங்குநேரி சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு உடனடியாக அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று இயக்குனர் மோகன் ஜி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை சக பள்ளி மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. படுகாயம் அடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தாக்குதல் தொடர்பாக 17 வயதுடைய பிளஸ்-2 மாணவர்கள் 4 பேர் மற்றும் 2 சிறார் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் இந்த சம்பவம் தொடர்பாக திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் மாரி செல்வராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"கடந்த இரண்டு நாட்களாக இந்த படிகட்டுகளில் சொட்டிக்கொண்டிருக்கும் சூடான இரத்தத்தின் கதையை யாரிடமாவது சீக்கிரம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். காய்ந்து போனால் அதை பழைய புண்ணாக்கி எளிதாக எல்லாரையும் கடந்து போகசொல்லி உங்கள் இதயம் உங்களுக்கே தெரியாமல் எல்லாரிடமும் மன்றாட ஆரம்பித்துவிடும்" என்று மாரி செல்வராஜ் பதிவிட்டுள்ளார்.

இதே போல் இயக்குனர் மோகன் ஜி தனது டுவிட்டர் பக்கத்தில், "மாணவர்கள் மத்தியில் அனைத்து தீய பழக்கங்களும் பரவி வருகிறது. சம்மந்தப்பட்டவர்களை கைது செய்து உயர்பட்ச தண்டனை உடனடியாக வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட சின்னதுரை மற்றும் அவரது தங்கை விரைவாக குணமடைய வேண்டி கொள்கிறேன். இவர்கள் குடும்பத்தினருக்கு அரசு பெரிய அளவில் உதவ வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story