என்னை விட நூறு மடங்கு ஏக்கத்தில் என் பெற்றோர்கள் இருந்தார்கள் - சாந்தனு நெகிழ்ச்சி
'புளூ ஸ்டார்' திரைப்படம் கடந்த 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
சென்னை,
இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'புளூ ஸ்டார்' (Blue Star). இந்த படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார். 'புளூ ஸ்டார்' திரைப்படம் கடந்த 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
இதையடுத்து இப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சாந்தனு பேசியதாவது,
"இந்த மேடையில் இருப்பது எனக்கு கனவு மாதிரி இருக்கிறது. இந்த படம் எனக்கு நிறைய பரிசுகள் கொடுத்தது. இந்த படத்தில் என் கதாபாத்திரத்திற்கு அனைவரும் ஆதரவு கொடுத்துள்ளீர்கள். இது என்னுடைய வாழ்க்கையில் கிடைத்தது இல்லை. இது 'புளூ ஸ்டார்' எனக்கு கொடுத்த பரிசு. இந்த படம் சினிமா பற்றிய பாடத்தை எனக்கு கற்றுக் கொடுத்தது. இது எல்லாம் தாண்டி என் அப்பா- அம்மாவிற்கு சந்தோஷத்தை கொடுத்தது. அவர்கள் முகத்தில் புன்னகையை பார்த்தேன். நான் எவ்வளவு ஏக்கத்தில் இருந்தேனோ அதை விட நூறு மடங்கு ஏக்கத்தில் என் பெற்றோர்கள் இருந்தார்கள். அதற்கு 'புளூ ஸ்டார்' எனக்கு கொடுத்த பரிசு" என்று பேசினார்.