'எனது செயல் மாற்றத்தை தூண்டியுள்ளது' - தமிழக பஸ்கள் குறித்து நடிகை ரஞ்சனா நாட்சியார் பதிவு
இவர் அரசு பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவர்களை அடித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டார்.
சென்னை,
தமிழில் 'துப்பறிவாளன்', 'இரும்புத்திரை', 'அண்ணாத்த', 'டைரி', 'நட்பே துணை' உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரஞ்சனா நாச்சியார். இவர் சமீபத்தில் குன்றத்தூரில் அரசு பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவர்களை அடித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தார்.
இதற்கிடையே மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வதை தடுக்க அனைத்து பஸ்களிலும் தானியங்கி கதவுகள் அமைக்கப்படும் எனவும் அனைத்து பஸ்களிலும் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படும் எனவும் சமீபத்தில் போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தமிழக பஸ்களின் இந்த மாற்றம் குறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் நடிகை ரஞ்சனா நாட்சியார் கருத்து தெரிவித்து உள்ளார். அவர் அந்த பதிவில், 'அரசு பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த மாணவர்களை சொந்த குழந்தைகளை திட்டுவது போல் கண்டிததேன். அது எனக்கு மன உளைச்சலையும் நிதி இழப்பையும் தந்தாலும் எனது செயல் மாற்றத்தை தூண்டியுள்ளது.
தமிழ்நாடு போக்குவரத்து துறை தற்போது பஸ்களில் தானியங்கி கதவுகள் மற்றும் சிசிடிவி கேமராக்களை நிறுவுகிறது. இது அந்த சவாலான நாளுக்கு கிடைத்த வெற்றி. தமிழகத்தில் உள்ள அனைத்து பேருந்துகளிலும் இந்த பாதுகாப்பு நடவடிக்கையை விரிவுபடுத்த வேண்டும்' என பதிவிட்டு உள்ளார்.