அவமானப்படுத்தியவர்களுக்கு சாதனையால் பதிலடி கொடுத்த முத்துக்காளை
நடிகர் முத்துக்காளை பல படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக 2021-ம் ஆண்டு வெளியான 'பேய் இருக்க பயமேன்' படத்தில் நடித்திருந்தார்.
ராஜபாளையத்தை சொந்த ஊராக கொண்ட நடிகர் முத்துக்காளை கராத்தேவில் பிளாக் பெல்ட் வென்றுள்ளார். சினிமா மீது இருந்த ஆர்வத்தால் சென்னை வந்த இவர் சில படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றினார்.
கடந்த 1997-ம் ஆண்டு வெளியான 'பொன்மனம்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். பின்னர் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். அதிலும், 'இரண்டு பேரும் செத்து செத்து விளையாடலாம்' போன்ற காமெடிகள் இன்றும் ரசிகர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இப்படி நகைச்சுவை நடிகராக வலம் வந்த முத்துக்காளை கடைசியாக 2021-ம் ஆண்டு வெளியான 'பேய் இருக்க பயமேன்' படத்தில் நடித்திருந்தார்.
58 வயதான நடிகர் முத்துக்காளை தற்போது இளங்கலை தமிழ் இலக்கியத்தில் (B.lit) முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டம் வென்றுள்ளார் இது இவரது மூன்றாவது பட்டமாகும். முன்னதாக, கடந்த 2017-ம் ஆண்டு தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைகழகத்தில் (TAMIL NADU OPEN UNIVERSITY) பி.ஏ. வரலாறு படித்து தேர்ச்சி பெற்றார். 2019-ம் ஆண்டு எம்.ஏ தமிழ் படித்தவர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டம் பெற்றார்.
இந்நிலையில், நடிகர் முத்துக்காளை தனது படிப்பு குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், "இளைஞர்களுக்கு நான் சொல்ல வேண்டிய விஷயம் என்ன என்றால், படிக்க வேண்டிய வயதில் படித்துவிடுங்கள். இந்த கல்வி உங்கள் குடும்பம் மட்டுமல்ல உங்கள் தலைமுறையை காப்பாற்றும்.
நான் குடிபோதையில் இருந்து மீண்டு வரும்போது எனக்கு தெளிவான ஒரு பார்வை இருந்தது. நான் இளமையில் எதை இழந்தேனோ அதை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. நான் படிக்கும் போது என்னை பலரும் கிண்டல் செய்தார்கள். இந்த வயதில் இவர் படித்து என்ன செய்யபோகிறார் என்று சொன்னார்கள். ஆனால், எதையாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்து நான் படித்தேன்" என்று கூறினார்.