நாட்டு நாட்டு பாடல் தமிழில் உருவான விதம்... பகிர்ந்து கொண்ட மதன் கார்கி
நாட்டு நாட்டு பாடலை குறுகிய நேரத்தில் தமிழில் இயற்றியது ஒரு சவாலான பணியாக இருந்தது என பாடலாசிரியர் மதன் கார்கி தெரிவித்து உள்ளார்.
சென்னை,
டைரக்டர் எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் தயாரான 'ஆா்ஆா்ஆா்' திரைப்படம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் வெளியானது. நடிகா்கள் ராம்சரண், ஜூனியா் என்.டி.ஆர். உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம், மிக பெரிய வெற்றி பெற்றது.
உலக அளவில் ரூ.1,000 கோடிக்கும் கூடுதலாக வசூலித்து சாதனை படைத்தது. இந்த திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கான பல்வேறு பிரிவுகளில் விண்ணப்பித்திருந்த நிலையில், 'ஒரிஜினல் பாடல்' என்ற விருதின் பிரிவில் 15 பாடல்களில் ஒன்றாக இறுதி பட்டியலுக்கு தேர்வானது.
எம்.எம். கீரவாணி இசையமைப்பில் உருவான இந்த பாடலை, ராகுல் மற்றும் கால பைரவா பாடியிருந்தனர். இந்த பாடலில் ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ராம் சரணின் நடனம், பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.
ஆஸ்காருக்கு அடுத்தபடியாக உயரிய விருது என கருதப்படும் கோல்டன் குளோப்ஸ் விருதை 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தில் இடம் பெறும் 'நாட்டு நாட்டு' பாடல் வென்று இந்திய திரை உலகத்திற்கு பெருமை சேர்த்தது
இந்த நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற 95-ஆவது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் டைரக்டர் எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் வெளியான 'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கார் விருது வென்றது.
விழாவில் இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் அந்த பாடலை எழுதிய சந்திரபோஸ் ஆகியோர் ஆஸ்கார் விருது பெற்று கொண்டனர். இதனால் ரசிகர்கள், திரையுலகினர் உற்சாகத்தில் உள்ளனர்.
சிறந்த அசல் பாடல் (ஒரிஜினல் பாடல்) வரிசையில் ஆஸ்கார் விருது பெற்ற நாட்டு நாட்டு பாடல் தமிழில் உருவான விதம் பற்றி பாடலாசிரியர் மதன் கார்கி தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டு உள்ளார்.
அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருது பெற்றதற்காக, இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரை போன்று நானும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். குழுவில் ஒருவராக நான் கூடுதலாகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உண்மையில், நாட்டு நாட்டு பாடல் எனக்கு ஒரு சிறந்த பாடல் என அவர் கூறியுள்ளார்.
அதனை அவர் விளக்கி கூறும்போது, மக்களுக்கு நினைவிருக்குமோ, இல்லையோ எனக்கு தெரியாது. ஆனால், சென்னையில் முதன்முதலில் ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி நடந்தபோது, நாட்டு நாட்டு பாடல் பற்றி நான் 5 நிமிடங்கள் பேசினேன்.
இந்த பாடல் எப்படி என்னை பாதித்தது மற்றும் பாடலுக்குள் எவ்வளவு விசயங்கள் உள்ளன ஆகியவற்றை பற்றி பேசினேன். நான் என்ன உணர்ந்தேனோ அதனை உலகிற்கு கொண்டு சென்று சேர்த்த நிலையில், அதனுடன் ஒட்டு மொத்த உலகமும் இணைந்து இருப்பதற்காக நான் உண்மையில் மகிழ்ச்சி அடைகிறேன்
இந்த பாடலை எழுத குறைவான நேரமே இருந்தது. ஒரு நாளில் பாட்டை எழுதி முடிக்க வேண்டும். பாடல் எழுதும் நாங்கள் 4 பேர் ஒன்றாக சேர்ந்து இதனை இயற்றினோம். ஏறக்குறைய ஆலையில் வேலை பார்த்தது போன்று இருந்தது.
தெலுங்கில் முன்பே படம் பிடிக்கப்பட்டு தயாராக இருந்த பாடலில் உள்ள நடன அசைவு, அதன் உட்கருத்து மற்றும் உதட்டு அசைவு ஆகியவற்றுடன் ஒன்றி போகும் வகையில் குறுகிய நேரத்தில் பாடலை இயற்றுவது ஒரு சவாலாக இருந்தது என அவர் கூறியுள்ளார்.