ரூ.180 கோடி பட்ஜெட்டில் வெளியான அமீர்கானின் 'லால்சிங் சத்தா' படத்தின் வசூல் எவ்வளவு?


ரூ.180 கோடி பட்ஜெட்டில் வெளியான அமீர்கானின் லால்சிங் சத்தா படத்தின் வசூல் எவ்வளவு?
x

Image Courtesy: AFP

அமீர்கான் தயாரித்து நடித்த திரைப்படமான ‘லால்சிங் சத்தா’ திரைப்படம் கடந்த 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

மும்பை,

ஹாலிவுட்டில் உருவான 'பாரஸ்ட் கேம்ப்' படத்தை இந்தியில், 'லால்சிங் சத்தா' என்ற பெயரில் தயாரித்து நடித்துள்ளார் நடிகர் அமீர்கான். அத்வைத் சந்தன் இயக்கும் இப்படத்தில் நடிகை கரீனா கபூர் நடித்துள்ளார்ர். 180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான இப்படம் கடந்த 11-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

இதனிடையே, இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பு இருந்தே, 'பாய்காட் லால்சிங் சத்தா' (boycott Laal Singh Chaddha) என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வைரலானது.

கடந்த 2015-ம் ஆண்டு பேட்டி ஒன்றில் நடிகர் அமீர்கான் 'நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதால் குழந்தைகள் பாதுகாப்பை கருதி நாட்டை விட்டு வெளியேறி விடலாம் என்று எனது மனைவி அறிவுறுத்தினார்' என்று தெரிவித்தார்.

இதனையடுத்து அவரது படங்கள் வெளியாகும் சமயங்களில் இதுபோன்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங் ஆக்கப்பட்டு அமீர்கானின் படத்தை புறக்கணிக்க வேண்டும் என வைரலாக்கப்பட்டு வருகின்றன.

தற்போது, 'லால்சிங் சத்தா' திரைப்படத்தையும் புறக்கணிக்குமாறு டுவிட்டரில் டிரெண்ட் ஆன நிலையில், நான் யாரையாவது, எந்த வகையிலாவது மனதளவில் காயப்படுத்தி இருந்தால் அவர்களிடம் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். நான் யாரையும் புண்படுத்த விரும்பவில்லை. என் படத்தை யாராவது பார்க்க விரும்பவில்லை என்றால், அவர்களின் உணர்வுகளை மதிக்கிறேன்" என அமீர்கான் கடந்த 12-ம் தேதி திரைப்பட விளம்பர விழாவில் தெரிவித்தார். ஆனாலும், 'பாய்காட் லால்சிங் சத்தா' ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில், கடந்த 11-ம் தேதி வெளியான 'லால்சிங் சத்தா' திரைப்படம் சனி, ஞாயிறு வாரவிடுமுறை நாட்களையும் கடந்த நிலையில் இப்படம் இதுவரை ஈட்டிய வசூல் தொகை குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

180 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தியேட்டர் வசூலில் மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது. 11-ம் தேதி வியாழக்கிழமை வெளியான இந்த திரைப்படம் நேற்று வரையிலான 4 நாள் மொத்த வசூலாக 38 கோடியே 75 லட்ச ரூபாய் மட்டுமே ஈட்டியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் வெளியான அமீர்கானின் திரைப்படங்களில் மிகவும் மோசமான வசூலை பெற்ற படமாக 'லால்சிங் சத்தா' மாறியுள்ளது. ரூ.180 கோடியில் தயாரான திரைப்படம் இதுவரை ரூ. 38 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதால் படக்குழுவினர் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதேவேளை, இந்த திரைப்படம் ஓடிடி-யில் வெளியிட ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாலும், திரைப்படத்திற்கான சாட்டிலைட் உரிமத்தாலும் நஷ்டத்தில் இருந்து தப்பிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.


Next Story