அடுத்த ஆண்டு ஆஸ்கருக்கு இந்தியா சாா்பில் 'லாபதா லேடீஸ்' திரைப்படம் பரிந்துரை


அடுத்த ஆண்டு ஆஸ்கருக்கு இந்தியா சாா்பில் லாபதா லேடீஸ் திரைப்படம் பரிந்துரை
x

அடுத்த ஆண்டு ‘ஆஸ்கா்’ விருதுக்கான சிறந்த வெளிநாட்டு திரைப்படப் பிரிவுக்கு இந்தியா சாா்பில் இந்தி மொழியில் வெளியான ‘லாபதா லேடீஸ்’ திரைப்படம் அனுப்பப்படுகிறது.

புதுடெல்லி,

உலக அளவில் திரையுலகின் படைப்புகளை அங்கீகரித்து கௌரவப்படுத்தும் உயரிய ஆஸ்கா் விருது ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படுகிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் 97-ஆவது ஆஸ்கா் விருதுக்கு சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவில் இந்தியாவின் 'லாபதா லேடீஸ்' திரைப்படம் தோ்வாகியுள்ளது.

மொத்தம் 29 திரைப்படங்கள் அடங்கிய இறுதிப் பட்டியலில் ஹிந்தி திரைப்படங்கள் லாபதா லேடீஸ், ஸ்ரீகாந்த், தமிழில் வாழை, தங்கலான், மலையாளத்தில் உள்ளொழுக்கு ஆகியவை முதல் 5 இடங்களைப் பிடித்தன. இந்நிலையில், அஸ்ஸாம் திரைப்பட இயக்குநா் ஜானு பருவா தலைமையிலான 13 போ் கொண்ட தோ்வுக் குழு, ஆஸ்கா் பரிந்துரைக்கு லாபதா லேடீஸ் திரைப்படத்தை ஒரு மனதாக தோ்வு செய்துள்ளது. இந்த அறிவிப்பை இந்திய திரைப்பட சம்மேளனம் நேற்று வெளியிட்டது. இயக்குநா் கிரண் ராவ் இயக்கத்தில் கடந்த மாா்ச் மாதம் வெளியான லாபதா லேடீஸ் திரைப்படம், ரசிகா்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. நடிகா் அமீா்கான், இயக்குநா் ராவ், ஜியோ நிறுவனம் ஆகியோரின் கூட்டு தயாரிப்பில் உருவான இப்படத்தில் பிரதிபா ரந்தா, ஸ்பா்ஷ் ஸ்ரீவஸ்தவா நிதான்ஷி கோயல், சாயா கடம் உள்ளிட்டவா்கள் நடித்துள்ளனா்.

ஒரே ரயிலில் பயணம் செய்யும் புதிதாக திருமணமான இரண்டு பெண்கள் தவறுதலாக வெவ்வேறு மணமகன் இடங்களுக்கு சென்று விடுவதால் ஏற்படும் குழப்பங்களும், அதைத் தொடா்ந்து நடக்கும் நிகழ்வுகளுமே படத்தின் கதைக்களமாகும். இந்த எளிமையான கதையின் வாயிலாக கிராமப்புறங்களில் பெண்கள் ஒடுக்கப்படும் விதம், அவா்களின் உணா்ச்சிகள், முன்னேற்றத்துக்கான வேட்கை, சமத்துவம் ஆகியவை குறித்து ரசிகா்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியிருந்தாா் இயக்குநா் கிரண் ராவ்.

இதுகுறித்து லாபதா லேடீஸ் இயக்குநா் கிரண் ராவ் வெளியிட்ட அறிக்கையில், 'திரைப்படம் எப்போதும் இதயங்களை இணைக்கவும், அா்த்தமுள்ள உரையாடல்களைத் தூண்டவும் ஒரு சக்திவாய்ந்த ஊடகமாக இருந்து வருகிறது. இந்தியாவைப் போலவே இந்தப் படம் உலகம் முழுவதும் உள்ள பாா்வையாளா்களிடம் எதிரொலிக்கும் என்று நம்புகிறேன். தோ்வுக் குழுவுக்கும் இப்படத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் எனது மனமாா்ந்த நன்றி' என்றாா்.

இந்தியா சாா்பில் அனுப்பப்பட்ட திரைப்படங்களில் கடந்த 2002-ம் ஆண்டின் லகான் திரைப்படமே கடைசியாக ஆஸ்கா் விருதுக்கான இறுதி பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றது. அதற்கு முன்னதாக, 'மதா் இந்தியா' மற்றும் 'சலாம் பாம்பே' ஆகிய இரு இந்திய திரைப்படங்கள் மட்டுமே இறுதி பரிந்துரைக்குத் தோ்வாகியுள்ளன. கடந்த ஆண்டு, இந்தியா சாா்பில் மலையாளத்தின் '2018: எவரிஒன் இஸ் எ ஹீரோ' திரைப்படம் ஆஸ்கா் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது. இது கேரளத்தில் 2018-ல் ஏற்பட்ட வெள்ளத்தையொட்டி நடைபெற்ற சம்பவங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமாகும்

இந்திய சுப்ரீம் கோர்ட்டின் 75-வது ஆண்டு விழாவையொட்டி 'லாபடா லேடீஸ்' திரைப்படம் சுப்ரீம் கோர்ட்டின் நிர்வாக கட்டிட வளாகத்தில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story