கேரள அரசின் விருதுகள் அறிவிப்பு: சிறந்த நடிகராக மம்முட்டி தேர்வு
2022-ம் ஆண்டுக்கான கேரள மாநில திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. கேரளாவின் கலாசார விவகாரங்கள் துறை அமைச்சர் சஜி செரியன் அறிவித்துள்ளார்.
அதன்படி சிறந்த படமாக 'நண்பகல் நேரத்து மயக்கம்' தேர்வாகி இருக்கிறது. இதில் நடித்த மம்முட்டிக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகையாக வின்சி அலோசியஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல சிறந்த இயக்குனராக மகேஷ் நாராயணன், சிறந்த குணசித்திர நடிகராக பி.பி.குஞ்சு கிருஷ்ணன், சிறந்த குணசித்திர நடிகையாக தேவி வர்மா, சிறந்த குழந்தைகள் திரைப்படமாக 'பல்லோட்டி 90'ஸ் கிட்ஸ்', சிறந்த கதை எழுத்தாளராக கமல் கே.எம்., சிறந்த இசையமைப்பாளர்களாக எம்.ஜெயச்சந்திரன் (பாடல்கள்), டான் வின்சென்சட் (பின்னணி இசை), சிறந்த ஒளிப்பதிவாளர்களாக மனேஷ் மாதவன், சந்துரு செல்வராஜ் ஆகியோருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த விருதுகள் கடந்த 19-ந் தேதியே அறிவிக்கப்படுவதாக இருந்தது. ஆனால், கேரளாவின் முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டியின் மறைவையடுத்து தள்ளிவைக்கப்பட்டது. இந்தநிலையில் தற்போது இந்த விருது பட்டியல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.