ஜெயலலிதா குறித்து ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி
நடிகை ஸ்ரேயா ரெட்டி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
சென்னை ,
வெயில், அங்காடித் தெரு, அரவான் உள்ளிட்ட சில ஹிட் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் வசந்த பாலன். ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர், வெயில் படத்திற்காக தேசிய விருது வென்றார். கடைசியாக அர்ஜுன் தாஸை வைத்து அநீதி என்ற தலைப்பில் ஒரு படமெடுத்திருந்தார். கடந்த வருடம் வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது.
தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், ராடான் மீடியாவொர்க்ஸின் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் "தலைமைச் செயலகம்" சீரிஸைத் தயாரித்துள்ளார். ஒரு பெண்ணின் இடைவிடாத அதிகார வேட்கை, பேராசை, வஞ்சகம் ஆகியவை பின்னிப்பிணைந்த தமிழக அரசியலின் கதையைச் சொல்லும் இந்த சீரிஸ் இன்று ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியானது.
"தலைமைச் செயலகம்" சீரிஸ் தமிழக அரசியலில் இரக்கமற்ற அதிகார வேட்கையைக் கூறும் அழுத்தமான பொலிடிகல் திரில்லராக உருவாகியுள்ளது. இந்த சீரிஸில் கிஷோர், ஷ்ரியா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இதில் நடித்த நடிகை ஸ்ரேயா ரெட்டி நேர்காணல் ஒன்றில், "25 வருடமாக நான் ஜெயலலிதா அம்மாவின் பக்கத்து வீட்டில் வசித்திருக்கிறேன். நான் சிறிய வயதிலிருந்தே அவர்கள் வெளியே செல்லும்போது கை அசைப்பேன். காரில் இருந்தபடி அவர்களும் கை அசைப்பார்கள். சில நேரங்களில் பிஸியாக இருந்தால் பார்க்கமாட்டார்கள். அப்போதிலிருந்தே எனக்கு ஜெயலலிதா அம்மா மாதிரி இருக்கனும் என்ற ஆசை இருந்தது. அவர்தான் எனக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய உத்வேகமாக இருக்கிறார்" என்றார்.
நடிகை ஸ்ரேயா ரெட்டி சமீபத்தில் சலார் திரைப்படத்தில் நடித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்தார். தற்போது தெலுங்கில் பவன் கல்யாணின் படத்தில் நடித்து வருகிறார்.