'படங்களில் பாடல்கள் குறைவது நல்லதல்ல' - டைரக்டர் பேரரசு
ஈழத்தமிழரான அம்பாளடியாளின் பாடல் இசை ஆல்பம் நிகழ்ச்சியில் டைரக்டர் பேரரசு பங்கேற்று பேசும்போது, திரைப்படங்களில் பாடல்கள் குறைவதற்கு வருத்தம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசும்போது, "கே.பாக்யராஜ் இயக்குனராக மட்டும் அல்ல, இசையமைப்பாளராகவும் வெற்றி பெற்றவர். இப்போது தூய தமிழ் பாடல்களை கேட்பது அபூர்வமாகிவிட்டது. அம்பாளடியாள் போன்றவர்களால் தான் தூய தமிழ் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
தமிழ் என்றாலே இசை தான், இசை என்றாலே தமிழ் தான். இசைத்தமிழ், இயல்தமிழ், நாடகத்தமிழ் என்று முத்தமிழ் இருக்கிறது. வேறு எந்த மொழிக்கும் இசை இல்லை. தமிழுக்கு மட்டும்தான் இசைத்தமிழ் என்று இருக்கிறது. எனவே, இசை என்றாலே அது தமிழ் தான்.
இன்று திரைப்படங்களில் பாடல்கள் குறைந்து கொண்டே வருகிறது. இது நல்லதல்ல. சில படங்களில் பாடல்களே வைப்பதில்லை. திரைப்படங்களில் பாடல்கள் இல்லை என்றால் அது தமிழுக்குதான் ஆபத்து. எனவே, ஒரு பாடலாவது படங்களில் வைத்து விடவேண்டும். தமிழர்கள் கலாசாரம், பண்பாட்டில் இசையும், பாடல்களும் முக்கிய பங்கு வகிக்கிறது'' என்றார்.