இந்திரா காந்தியாக நடித்த கங்கனா ரணாவத் படம் தள்ளிவைப்பு
இந்திரா காந்தியாக நடித்த கங்கனா ரணாவத் ‘எமர்ஜென்சி’ படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது படம் தள்ளிப்போவதாக கங்கனா தெரிவித்து உள்ளார்.
கங்கனா ரணாவத் 'எமர்ஜென்சி' என்ற படத்தில் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி வேடத்தில் நடித்து இயக்கி உள்ளார். அவரே தயாரித்தும் இருக்கிறார். நெருக்கடி நிலையை மையமாக வைத்து தயாராகி உள்ளது. இந்த படத்துக்கு காங்கிரஸ் தரப்பில் ஏற்கனவே எதிர்ப்பு கிளம்பி உள்ளது. 'எமர்ஜென்சி' படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது படம் தள்ளிப்போவதாக கங்கனா தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து வலைத்தளத்தில் கங்கனா வெளியிட்டுள்ள பதிவில், "நான் 'எமர்ஜென்சி' படப்பிடிப்பில் எவ்வளவோ கற்றுக்கொண்டேன். பொருளாதார ரீதியாகவும் நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன். நான் எங்கு சென்றாலும் இந்த படம் ரிலீஸ் எப்போது என்றுதான் அனைவரும் கேட்கிறார்கள்.
நாங்கள் முதலில் இதை நவம்பர் 24-ந் தேதி ரிலீஸ் செய்ய வேண்டும் என நினைத்தோம். ஆனால் நான் நடித்த படங்கள் தொடர்ந்து ரிலீசுக்கு தயாராக உள்ளன. எனவே இந்த படத்தை அடுத்த வருடத்துக்கு தள்ளிப்போடுகிறோம். விரைவில் ரிலீஸ் தேதியை அறிவிப்போம்'' என்று கூறியுள்ளார்.
இந்த படத்தைப் பற்றி ஏற்கனவே கங்கனா பேசுகையில், "எனக்கு சம்பந்தப்பட்ட அனைத்து சொத்துகளையும் இந்த படத்திற்காக அடகு வைத்துவிட்டேன்'' என தெரிவித்து இருந்தார்.