'இன்று கற்பூரம் ஏற்றவில்லை என்றால் தீவிரவாதி என்பார்கள்' - இயக்குனர் பா.ரஞ்சித் பரபரப்பு பேச்சு


இன்று கற்பூரம் ஏற்றவில்லை என்றால் தீவிரவாதி என்பார்கள் - இயக்குனர் பா.ரஞ்சித் பரபரப்பு பேச்சு
x
தினத்தந்தி 22 Jan 2024 8:32 PM IST (Updated: 22 Jan 2024 8:33 PM IST)
t-max-icont-min-icon

'ப்ளூ ஸ்டார்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

சென்னை,

இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ப்ளூ ஸ்டார்'. இப்படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். தமிழ் ஏ.அழகன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு மேற்கொள்கிறார். இந்த படம் வருகிற 25ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் பா. ரஞ்சித், அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் எனப் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் பேசினார். அவர், 'இன்று முக்கியமான நாள், வீட்டில் சென்று கற்பூரம் ஏற்றவில்லை என்றால் நாம் தீவிரவாதி ஆகிவிடுவோம். தீவிரமான காலக்கட்டத்தை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருக்கிறது.

இன்னும் 5 - 10 ஆண்டுகளில் எவ்வளவு மோசமான இந்தியாவில் இருக்கப்போகிறோம் என்கிற பயத்தை உணர்த்துகிறது. அதுபோன்ற காலக்கட்டத்தில் நுழையும் முன்பு நம் மூளையில் ஏற்படுத்தி வைத்திருக்கும் பிற்போக்குத்தனத்தையும் தினம் தினம் சொல்லிக் கொடுத்து கொண்டிருக்கிற மதவாதத்தையும் அழிக்க வேண்டும். அதனை அழிப்பதற்கு நம்மிடம் இருக்கும் கருவியாக கலையை நாம் பயன்படுத்திக் கொள்கிறோம்.

இன்று ராமர் கோவில் திறப்பை ஒட்டி அதன் பின்னால் நடக்கும் மத அரசியலை நாம் கவனிக்க வேண்டும். மக்கள் மனதில் வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் பிற்போக்குத் தனத்தை இந்த கலை சரி செய்யும் என்று நாம் நம்புகிறோம். அந்த நம்பிக்கையோடுதான் இந்த கலையை நாம் கையாள்கிறோம்' என்று தெரிவித்தார்.


Next Story