ஒரு யுக மாற்றத்திற்கு மனிதர்கள் தயாராக வேண்டும் - கவிஞர் வைரமுத்து


ஒரு யுக மாற்றத்திற்கு மனிதர்கள் தயாராக வேண்டும் - கவிஞர் வைரமுத்து
x

திருமணம் என்ற பந்தத்துக்குள் நுழைய சமகால பெண்கள் அஞ்சுவதை பரவலாக கேட்பதாக கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மனைவி ஒருவரிடம் அவருடைய பெண் பிள்ளைகள் திருமணம் குறித்து கேட்டேன், முகத்தில் புன்னகை ஓடி உடைந்தது என்றும் பெண்கள் திருமணம் செய்து கொள்ள அஞ்சுகிறார்கள் என்று அவர் சொல்லியதை பரவலாகக் கேட்கிறேன் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தன்னுடைய எக்ஸ் தளத்தில் இன்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்

''என் மதிப்புக்குரிய

அமைச்சர் ஒருவரின்

மனைவியிடம் கேட்டேன்

'பெண் பிள்ளைகளுக்கு

எப்பொழுதம்மா திருமணம்?'

அவர் முகத்தில் - ஒரு

வாடிய புன்னைகை

ஓடி உடைந்தது

'சமகாலத்தில்

திருமணமான சகபெண்களின்

வாழ்க்கையைப்

பார்த்துப் பார்த்துத்

திருமணம் என்றதும்

அஞ்சுகிறார்கள் அண்ணா'

என்றார்

இந்தக் குரலை

நான் பரவலாகக் கேட்கிறேன்

நிகழ்காலத் தலைமுறையின்

விழுமியச் சிக்கல் இது

ஒன்று

திருமண பந்தத்தின்

ஆதி நிபந்தனைகள்

உடைபட வேண்டும்

அல்லது

திருமணம் என்ற நிறுவனமே

உடைபடுவதை

ஒப்புக்கொள்ள வேண்டும்

ஒரு யுக மாற்றத்திற்குத்

தமிழர்கள் அல்ல அல்ல

மனிதர்கள் தங்கள் மனத்தைத்

தயாரித்துக்கொள்ள வேண்டும்

சமூகம் உடைந்துடைந்து

தனக்கு வசதியான

வடிவம் பெறும் -

கண்டங்களைப்போல"

எனப் பதிவிட்டுள்ளார்.

சமீபகாலமாக திருமணமே வேண்டாம் என்ற நிலைக்கு இளம் வயதினர் பலரும் வந்துவிட்டதை நம்மை சுற்றி இருப்பவர்கள் சொல்வதை வைத்து கேட்டிருக்கலாம். அது ஒரு அழகான உறவு என்றாலும், அதற்குள் இருக்கும் சிக்கலை தீர்க்க தெரியாமலும், பிறரைச் சார்ந்து இருக்காமல் வாழ வேண்டும் என்ற எண்ணமும், தனி மனித சுதந்திரமும் என பல வகையான எண்ணங்கள் திருமணம் மீதான விருப்பத்தை குறைத்து வருகிறது என்பதே உண்மை.

மற்ற உறவுகளை போல திருமண உறவும் ஒரு அழகான ஒன்று என்பதை இளம் வயதினர் உணர வேண்டுமென சமூக வலைத்தளத்தில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.


Next Story