இது என் வாழ்க்கையின் புதிய தொடக்கம் - தேசிய விருது வென்ற கீர்த்தி சனோன்
கீர்த்தி சனோன், 'மிமி' படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்றார்.
டெல்லி,
இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர், நடிகை கீர்த்தி சனோன். இவர் டெல்லியில் பிறந்தவர். பொறியியல் பட்டம் பெற்ற இவர், அதன்பிறகு மாடலிங் துறையில் நுழைந்தார். படிப்படியாக உயர்ந்து சினிமா துறையிலும் கால் பதித்தார்.
கீர்த்தி சனோனின் அறிமுகப் படமாக 'நெனோக்கடைன்' என்ற தெலுங்கு படம் அமைந்தது. அதன்பின்னர் ஹவுஸ்புல் 4, தில்வாலே, கணபத் 1, மிமி, ஷெஹ்சாதா உள்பட பல படங்களில் நடித்து பிரபலமானர். சமீபத்தில் பல சர்ச்சைகளில் சிக்கிய பெரிய பட்ஜெட் படமான ஆதிபுருஷ் படத்திலும் நடித்து இருந்தார்.
நேற்று(வியாழக்கிழமை) சினிமா துறைக்கான தேசிய விருதுகள் அறிவிக்கபட்டன. இதில் சிறந்த நடிகைக்கான விருது, 'மிமி' படத்திற்காக நடிகை கீர்த்தி சனோனுக்கும், 'கங்குபாய் கத்தியாவாடி' படத்திற்காக நடிகை அலியாபட்டுக்கும் கூட்டாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கீர்த்தி சனோன் அளித்துள்ள பேட்டியில், " எனக்கும், என்னுடைய குடும்பத்தினர் மற்றும் மிமி படத்தில் பணியாற்றியவர்களுக்கும் மகிழ்ச்சியான தருணம் இது. இந்த தேசிய விருது வென்றபோது நான் பெற்ற உணர்வை எப்போதும் மறக்கமாட்டேன். இது என் வாழ்க்கையின் புதிய தொடக்கம் என நம்புகிறேன். மிமி படம் எப்போதும் என்னுடைய சினிமா வாழ்க்கையில் சிறந்த இடத்தை பெற்றிருக்கும்." என்றார்.