'ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள திரையுலகில் ஒரு கேம் சேஞ்சராக மாறும்' - தனுஷ் பட நடிகை


image courtecy:instagram@iamsamyuktha_
x

நாட்டையே உலுக்கிய ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து நடிகை சம்யுக்தா மேனன் பேசியுள்ளார்.

சென்னை,

மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் சம்யுக்தா மேனன் தீவண்டி, லில்லி, கடுவா, தெலுங்கில் பீம்லா நாயக் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இவர் தமிழில் களரி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, தனுசுக்கு ஜோடியாக வாத்தி படத்திலும் நடித்திருந்தார்.

இவர் அடுத்து சுயம்பு படத்தில் நடித்து வருகிறார். நிகில் சித்தார்த் இப்படத்தில் நாயகனாக நடிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகிறது. தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் பிசியாக நடித்து வந்த சம்யுக்தா மேனன் தற்போது கஜோல் நடிக்கும் 'மஹாராக்னி' படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாக உள்ளார்.

இந்நிலையில், மலையாள சினிமாவை உலுக்கிய ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'காட்டில் மாட்டிக் கொண்டு வழிதேடும் நிலையில்தான் திரைத்துறை உள்ளது. இதனை வாய்ப்பாக எடுத்துக்கொண்டு சிலர் சுரண்டல்களில் ஈடுபடுகின்றனர். சினிமா துறையில் பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதிகள் கிடைக்க வேண்டும். ஹேமா கமிட்டியின் அறிக்கை மலையாள திரையுலகில் ஒரு கேம் சேஞ்சராக மாறும்', என்றார்.

நாட்டையே உலுக்கிய ஹேமா கமிட்டி அறிக்கையை ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழு தாக்கல் செய்தது. இந்த அறிக்கையை கேரள அரசு சமீபத்தில் வெளியிட்டது. அதனைத்தொடர்ந்து பல நடிகைகள், நடிகர்கள், டைரக்டர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story