'திரையரங்குகளுக்கு சென்று படம் பாருங்கள்' - ரசிகர்களுக்கு நடிகை கங்கனா வேண்டுகோள்...!
நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ள 'தேஜஸ்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
சென்னை,
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான கங்கனா ரனாவத், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'தாம் தூம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின்னர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெ.ஜெயலலிதா வாழ்க்கை வரலாறாக உருவாகி வெளியான 'தலைவி' படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
இவர் நடிப்பில் சமீபத்தில் தமிழில் வெளியான 'சந்திரமுகி 2' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனை தொடர்ந்து இந்தியில் இவர் நடிப்பில் 'தேஜஸ்' என்ற திரைப்படம் கடந்த 27-ஆம் தேதி வெளியானது. சர்வேஷ் மேவாரா இயக்கிய இந்தப் படத்தில் கங்கனா விமானப்படை அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படம் வெளியான நாள் முதலே மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகை கங்கனா ரணாவத் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ரசிகர்கள் சினிமா படங்களை திரையரங்குகளுக்கு சென்று பார்க்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அந்த வீடியோவில் அவர் 'கொரோனா காலத்துக்கு முன்பே திரையரங்குகளுக்கு சென்று படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்தது. மேலும் கொரோனா காலத்தில் பல திரையரங்குகள் மூடப்பட்டுவிட்டன. தற்போது கொரோனா தொற்று குறைந்த பின்பும் பல்வேறு சலுகைகள், இலவச டிக்கெட்டுகள் அளித்தாலும் திரையரங்குகளில் இயல்பு நிலை திரும்பவில்லை' என்று தெரிவித்தார்.
மேலும் அவர், 'நியாயமான சலுகைகள் அளித்தாலும் திரையரங்குகளில் படம் பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது. நீங்கள் திரைப்படங்களை உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து திரையரங்குகளில் பாருங்கள். அப்போதுதான் திரையரங்கு உரிமையாளர்கள் வாழ முடியும்' என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.