'லியோ படத்தின் பிளாஷ் பேக் காட்சிகள் பொய்யாக கூட இருக்கலாம்' - இயக்குனர் லோகேஷ் பேச்சால் கிளம்பிய சர்ச்சை..!
லியோ படத்தின் பிளாஷ் பேக் காட்சிகளை வெளியான நாள் முதலே ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
சென்னை,
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் தயாரிப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 19 ஆம் தேதி வெளியான படம் லியோ. பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக மகத்தான சாதனை படைத்து வருகிறது.
லியோ படம் வெளியான முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.148 கோடி வசூல் செய்து சர்வதேச அளவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படம் என்ற சாதனையைப் படைத்தது. மேலும் முதல் 4 நாட்களில் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகக் கூறப்பட்டது. மேலும் 7 நாளில் உலகம் முழுவதும் 461 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளதாகப் படக்குழு அறிவித்தது.
வசூல் ரீதியாக சாதனை படைத்தாலும் லியோ படத்தின் பிளாஷ் பேக் காட்சிகளை வெளியான நாள் முதலே ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் சமீபத்திய பேட்டியில் 'லியோ படத்தின் பிளாஷ் பேக் காட்சிகள் பொய்யாக கூட இருக்கலாம்'என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவர் அந்த பேட்டியில், 'நேர நெருக்கடி காரணமாக 40 முதல் 45 நிமிடங்கள் வரை இருந்த பிளாஷ் பேக் காட்சிகளை 20 நிமிடங்களாக குறைத்தேன், மேலும் நீங்கள் கதையை பார்த்திபன் கூறி கேட்கவில்லை, கதையை இருதயராஜாக நடித்த மன்சூர் அலிகான்தான் கூறியுள்ளார், அது பொய்யாக கூட இருக்கலாம்' என்று கூறினார்.
இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் இயக்குனர் லோகேஷ் கனகராஜை விமர்சித்து வருகின்றனர். 'படத்தின் இறுதியில் ஏதாவது ஒரு காட்சியில் இது பொய் என்று தெரிவித்து இருக்கலாம், ஆனால் படம் வெளியாகி மோசமான விமர்சனங்களை பெற்ற பின் பேட்டியில் இதனை கூறுவது ஏற்புடையது அல்ல' என்று ரசிகர்கள் பலர் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.