ஹீரோவை கொண்டாடி தயாராகும் படங்கள் - நடிகை தமன்னா வருத்தம்
தென்னிந்திய மொழிகளில் ஹீரோவை சகிக்க முடியாத அளவுக்கு கொண்டாடும் கதையம்சத்தில் படங்களை எடுக்கிறார்கள் என்று நடிகை தமன்னா வருத்தம் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த தமன்னா சமீப காலமாக தென்னிந்திய படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார். சமீபத்தில் ரஜினியின் ஜெயிலர் படத்தில் மட்டும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார்.
இந்தி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்தி ஓ.டி.டி படத்திலும் நடிக்கிறார். இந்த நிலையில் தென்னிந்திய படங்களில் நடிப்பதை குறைத்தது ஏன்? என்று தமன்னாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்து தமன்னா கூறும்போது, 'தென்னிந்திய படங்களில் கமர்ஷியல் விஷயங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சில படங்களில் எனது கதாபாத்திரம் கதையோடு பொருந்தாமல் தனியாக இருந்தது.
இயக்குனர்களிடம் இந்த குறையை சரிசெய்ய சொல்லியும் எந்த பயனும் ஏற்படவில்லை. இதனால் அதுபோன்ற படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டாம் என்று விலகி விட்டேன்.
தென்னிந்திய மொழிகளில் ஹீரோவை சகிக்க முடியாத அளவுக்கு கொண்டாடும் கதையம்சத்தில் படங்களை எடுக்கிறார்கள். அதுபோன்ற படங்களில் நடிக்காமல் இருப்பது நல்லது என்று முடிவு செய்துள்ளேன். நடிப்பது எனது விருப்பம். வெற்றி தோல்வியை பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை'' என்றார்.