போலி முகநூல் கணக்கு: பிரபல நடிகை போலீசில் புகார்
போலி முகநூல் கணக்கு தொடங்கி எனக்கு எதிராக தவறான தகவல்களை பதிவேற்றி வருவதாக பிரபல கன்னட நடிகை பவித்ரா லோகேஷ் போலீசில் புகார் அளித்துள்ளார்.
பிரபல கன்னட நடிகை பவித்ரா லோகேஷ். இவர் தமிழில் கவுரவம், அயோக்கியா, க.பெ.ரணசிங்கம் மற்றும் சமீபத்தில் வெளியான வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கன்னடத்தில் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.
பவித்ரா லோகேஷ் ஏற்கனவே 2 முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். சில வாரங்களுக்கு முன்பு தெலுங்கு நடிகர் நரேசை திருமணம் செய்து கொண்டதாகவும், இது நரேசுக்கு 4-வது திருமணம் என்றும் தகவல்கள் பரவின. இருவரும் இதனை உறுதிப்படுத்தவில்லை.
இந்த நிலையில் பவித்ரா லோகேஷ் மைசூரு சைபர் குற்றப்பிரிவு போலீசில் தனக்கு எதிராக அவதூறுகள் பரப்பப்படுவதாக புகார் அளித்துள்ளார். புகார் மனுவில், ''முகநூல் பக்கத்தில் எனது பெயரில் மர்ம நபர்கள் போலி கணக்கை உருவாக்கி உள்ளனர். அதில் எனக்கு எதிராக தவறான தகவல்களை பதிவேற்றி எனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தி வருகிறார்கள். இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டு உள்ளது. அவதூறு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டு உள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.