படத்திற்கு ஆங்கில தலைப்பு... 40 வருட சினிமா வரலாற்றில் முதல்முறையாக மணிரத்னம் எடுத்த முடிவு...!


படத்திற்கு ஆங்கில தலைப்பு... 40 வருட சினிமா வரலாற்றில் முதல்முறையாக மணிரத்னம் எடுத்த முடிவு...!
x
தினத்தந்தி 7 Nov 2023 2:30 AM (Updated: 7 Nov 2023 2:42 AM)
t-max-icont-min-icon

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள படத்திற்கு 'தக் லைப்' என பெயரிடப்பட்டுள்ளது.

சென்னை,

1983ஆம் ஆண்டு 'பல்லவி அனு பல்லவி' என்ற கன்னட படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மணிரத்னம். அதன்பிறகு மவுனராகம், நாயகன், தளபதி, ரோஜா போன்ற பல வெற்றி படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை உருவாக்கி வைத்துள்ளார். தற்போது நடிகர் கமல்ஹாசனின் 234-வது படத்தை மணிரத்னம் இயக்குகிறார். 37 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணையவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நடிகை திரிஷா, நடிகர்கள் துல்கர் சல்மான், ஜெயம்ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இந்த படத்தின் தலைப்பு வெளியானது. அதன்படி இந்த படத்திற்கு 'தக் லைப்' என பெயரிட்டுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இயக்குனர் மணிரத்னத்தின் 40 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக இந்த படத்திற்கு ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போது இது பேசுபொருளாகி உள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் சிலர் மணிரத்னம் எதற்காக இந்த முடிவை எடுத்தார், தமிழ் பெயரை இந்த படத்திற்கு வைத்திருக்கலாமே...? என்ற பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இயக்குனர் மணிரத்னம் கடைசியாக பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2ம் பாகத்தை இயக்கியிருந்தார். பான் இந்தியா படமாக வெளியான அந்த படத்திற்கு தமிழை தவிர மற்ற மொழிகளில் PS 1 மற்றும் PS 2 என பெயரிட்டிருந்தார். எனவே இந்த படத்திற்கு ஆங்கிலத்தில் பெயர் வைத்திருப்பதால் இதுவும் பான் இந்தியா படமாக வெளியாகலாம் என ஒருசிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Next Story