'கருப்பு எம்.ஜி.ஆர்' என்று சொல்லி கோர்த்துவிடாதீர்கள் - ராகவா லாரன்ஸ்


கருப்பு எம்.ஜி.ஆர் என்று சொல்லி கோர்த்துவிடாதீர்கள் - ராகவா லாரன்ஸ்
x

ஏழை விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறேன் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.

கோயம்புத்தூர்,

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த தேவராயபுரம் கிராமத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ் நடத்தும் 'மாற்றம்' அறக்கட்டளை சார்பில் ஏழை விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக, அந்த கிராமத்திற்கு வருகை தந்த ராகவா லாரன்ஸ்க்கு ஊர் மக்கள் சார்பில் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் அக்கிராமத்தைச் சேர்ந்த ராமன், லட்சுமணன் ஆகியோரின் குடும்பத்திற்கு டிராக்டர் வழங்கினார். அப்போது அங்கு கூடி இருந்த கிராம மக்கள் கருப்பு எம்.ஜி.ஆர் என கோஷமிட்டனர். அப்போது மேடையில் பேசிய அவர், "நான் செய்யும் இந்த சேவை மூலம் அனைவருக்கும் சேவை எண்ணம் தோன்றினால் போதும். என்னை கருப்பு எம்.ஜி.ஆர் என்று சொல்லி கோர்த்துவிடாதீர்கள்" எனக் கூறினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விவசாயம் வளர வேண்டும், ஏழை விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறேன். அந்த வகையில், இந்த கிராமத்தைச் சேர்ந்த ராமன், லட்சுமணன் என்பவர்களுக்கு டிராக்டர் வழங்கியுள்ளோம். அவர்கள் மற்ற ஏழை விவசாயிகளுக்கு உதவி செய்வார்கள் என நம்புகிறோம்.

நான் சேவை செய்ய செல்லும் இடத்தில் சில பேர் என்னை, அன்னை தெரெசா என்றும், கருப்பு எம்.ஜி.ஆர் என்றும், சிலர் என்னை தெய்வம் என்றும் அழைக்கின்றனர். இதையெல்லாம் நான் இதயத்தில் வைத்துக் கொள்வேன். ஒருபோதும் தலையில் வைத்துக் கொள்ளமாட்டேன்" என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்தார்.


Next Story