தூக்கத்திலேயே பிரிந்த உயிர்... பிரபல ஹாலிவுட் நடிகர் கார்ல் வெதர்ஸ் காலமானார்
4 பாகங்களாக வெளியான ராக்கி படத்தில்'அப்பல்லோ கிரீட்' கதாபாத்திரதில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் கார்ல் வெதர்ஸ்.
சென்னை,
1976ம் ஆண்டு ஹாலிவுட்டின் ஹீரோ சில்வெஸ்டர் ஸ்டாலோன் கதாநாயகனாக நடித்து வெளிவந்த திரைப்படம், ராக்கி. 4 பாகங்களாக வெளியான இந்த படத்தில் 'அப்பல்லோ கிரீட்' கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் கார்ல் வெதர்ஸ் (வயது 76).
இவர் பக் டவுன், செமி டப், பிரிடேட்டர், லிட்டில் நிக்கி, தி கம்பேக்ஸ், டாய் ஸ்டோரி-4 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 2019-ம் ஆண்டுக்கு பிறகு படங்களில் நடிக்காத கார்ல் வெதர்ஸ், டெலிவிஷன் தொடர்களில் மட்டும் நடித்து வந்தார்.
இந்நிலையில், தனது 76-வது வயதில் கடந்த 1ம் தேதி அன்று கார்ல் வெதர்ஸ் தூக்கதிலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கார்ல் வெதர்சிஸ் உடலுக்கு அவரது நண்பர்களும் ஹாலிவுட் நடிகர்களுமான சில்வெஸ்டர் ஸ்டோலன், மைக்கேல் பி ஜோர்டான் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
'ஒரு சகாப்தம் விடைபெற்றுள்ளது. கார்ல் வெதர்ஸை சந்தித்த பின்னர்தான் என் வாழ்க்கையே மாறியது. அவரது நினைவுகள் நம்மை விட்டு அகலாது', என்று சில்வெஸ்டர் ஸ்டோலன் உருக்கத்துடன் குறிப்பிட்டார். கார்ல் வெதர்ஸ் 3 பெண்களை மணந்து விவாகரத்து செய்தவர் என்பதும், அவருக்கு 2 மகன்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.