கையில் பேண்டேஜ் உடன் வாக்களித்த விஜய்... படப்பிடிப்பில் காயமா?
நடிகர் விஜய் இன்று மதியம் சென்னை நீலாங்கரையில் வாக்களித்தார். பொதுவாக தேர்தல் சமயங்களில் காலையிலேயே வாக்களித்து விடும் விஜய் இந்த முறை மதியமே வந்தார்.
சென்னை,
நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இந்தப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.
தற்போது வெளிநாட்டில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இதன் புதிய போஸ்டர் வெளியாகியது. அதில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி, கேரளா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்தநிலையில், தற்போது வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க, நடிகர் விஜய் ரஷ்யாவிலிருந்து இன்று சென்னை வந்தார்.ஆனால், அதிகாலையிலேயே வந்துவிடுவார்கள் என எதிர்பார்த்திருந்த நிலையில், இன்று மதியம் தான் சென்னை திரும்பியது படக்குழு. இதற்கு துபாயில் ஏற்பட்ட வெள்ளம்தான் காரணம் என்கிறார்கள்.
ரஷ்யாவில் இருந்து துபாய் வந்து தான் சென்னை திரும்ப முடியும். ஆனால், துபாயில் ஏற்பட்ட மோசமான வெள்ளப் பெருக்குக் காரணமாக விமான சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால், மாஸ்கோவில் இருந்து சுமார் 12 மணி நேரம் பயணப்பட்டு வாக்களிக்க சென்னை வந்திருக்கிறார் விஜய்.
மதியம் 12.20 மணியளவில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.அப்போது அவரது இடது கையில் பிளாஸ்திரி இருந்ததாக கூறப்படுகிறது. 'கோட்' படப்பிடிப்பில் பைக்கில் ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டபோது ஏற்பட்ட விபத்துதான் அது என்றும் தெரிய வந்துள்ளது.
கடந்த தேர்தலில் சைக்கிளில் வந்து விஜய் வாக்குகளை பதிவு செய்தநிலையில், அவரின் வாக்குப்பதிவு குறித்து இம்முறை எதிர்ப்பார்பு அதிகம் இருந்ததது. இந்நிலையில் இம்முறை காரில் வந்து வாக்கு செலுத்தினார்.