ரஜினியின் 'கூலி' பட டிரெய்லரை மறைமுகமாக கேலி செய்தாரா டைரக்டர் வெங்கட்பிரபு?
டைரக்டர் வெங்கட்பிரபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார்.
சென்னை,
தனுஷின் யாரடி நீ மோகினி உள்ளிட்ட படங்களில் நடித்த கார்த்திக் குமார் சமீபத்தில் சினிமா படங்களின் டிரெய்லரை கேலி செய்து பேசினார். இந்த வீடியோ வைரலானது.
அந்த வீடியோவில், "இப்போது வரும் படங்களின் டிரெய்லர்கள் எல்லாம் ஒரே மாதிரி இருக்கின்றன. அவன் வரப்போறான். அதோ வரான். அவன் வந்துட்டான் என்ற ரகத்தில் உள்ளது. மேலும் அந்த நடிகர்களின் பழைய படங்களின் வசனங்களும் வைக்கப்படுகின்றன'' என்று குறிப்பிட்டு உள்ளார்.
இந்த வீடியோவை டைரக்டர் வெங்கட்பிரபு தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். இதைபார்த்தவர்கள், ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் டிரெய்லரை கார்த்திக் குமார் கலாய்த்துள்ளார் என்றும், அதை வெங்கட்பிரபு ஆதரித்து இருக்கிறார் என்றும், இதன் மூலம் இவர் மறைமுகமாக கூலி டிரெய்லரை கேலி செய்துள்ளார் என்றும் பதிவிட்டனர். இது பரபரப்பானது.
இந்நிலையில், வெங்கட் பிரபு இதற்கு விளக்கம் அளித்து வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இல்லவே இல்லை. இது என்னை போன்ற கமர்சியல் படங்கள் எடுக்கும் எல்லா இயக்குனர்களுக்கும் பொருந்தக்கூடிய கருத்துத்தான்.
கார்த்திக் குமார் சொல்வது ஒருவகையில் உண்மைதான். கமர்சியல் படங்களை ஒரே மாதிரியாக எடுப்பதை அவர் விமர்சித்துள்ளார். வழக்கமான கமர்சியல் படங்களாக இல்லாமல் வித்தியாசமான படங்களை நாங்கள் கொடுத்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார்களா?'' இவ்வாறு தெரிவித்துள்ளார்.