'டெவில்' சினிமா விமர்சனம் - பேய் படமா.. கிரைம் திரில்லரா.. பயமுறுத்தியதா டெவில்..?
பூர்ணா, படம் முழுவதும் வந்து மனதைவிட்டு நீங்காமல் இருக்கிறார். நடிப்பிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறார்.
வக்கீல் விதார்த்துக்கும், நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பூர்ணாவுக்கும் பெற்றோர் நிச்சயம் செய்து திருமணத்தை முடிக்கின்றனர். அதன்பிறகு இன்னொரு பெண்ணுடன் கணவருக்கு தகாத உறவு இருப்பதை பூர்ணா அறிகிறார். அந்த அதிர்ச்சியில் கார் ஓட்டி செல்லும்போது எதிரே பைக்கில் வரும் திரிகுன் மீது கார் மோதி விடுகிறது. அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்க உதவி செய்கிறார். பின்னர் இருவருக்கும் நட்பு ஏற்படுகிறது.
கணவன் நடத்தையால் துயரத்தில் இருக்கும் பூர்ணாவுக்கு திரிகுனின் பேச்சும், செயலும் முகத்தில் மலர்ச்சியை அளிப்பதோடு மனதில் பாலின கிளர்ச்சியையும் உருவாக்குகிறது. இதற்கிடையே காதலியால் வஞ்சிக்கப்படும் விதார்த் மனம் திருந்தி மனைவியிடம் மன்னிப்பு கேட்டு இல்லற வாழ்க்கையை ஆரம்பிக்கிறார். பூர்ணாவும் திரிகுனிடம் தன்னை மறந்துவிடும்படி கூறுகிறார். அப்போது எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டு கொலையும் நடக்கிறது? இறந்தவர் யார்? பூர்ணாவின் வாழ்க்கை என்னவானது? என்பது மீதி கதை.
பணக்கார வக்கீல் வேடத்தை திறம்படச் செய்திருக்கிறார் விதார்த். தன் தவறுகளை நினைத்து மனம் திருந்துவது, கள்ளக்காதலியிடம் சரசமாடுவது என கேரக்டருக்கு அதிகமாகவே நியாயம் செய்திருக்கிறார். பூர்ணா, படம் முழுவதும் வந்து மனதைவிட்டு நீங்காமல் இருக்கிறார். நடிப்பிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறார்.
இயக்குனரின் கட்டளையின்படி தன் கேரக்டரை கச்சிதமாக செய்திருக்கிறார் இளம் நாயகன் திரிகுன். ஒளிப்பதிவாளர் கார்த்திக் முத்துகுமார் கதையோடு கலந்து ஆகச் சிறந்த காட்சி அனுபவத்தை வழங்கியிருக்கிறார். இயக்குனர் மிஷ்கின், இசையமைப்பாளர் அவதாரம் எடுத்து அற்புதமான மெலோடி கொடுத்து தன் இசை ஆளுமையை வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு. மேற்கத்திய பாணியிலான பின்னணி இசை மனதை மயக்க வைக்கிறது.
முதல் பாதி காட்சிகள் நீளமாக இருப்பது பலகீனம். வித்தியாசமான திரில்லர் கதையை திருப்பங்களுடன் ஆன்மிகம் அமானுஷ்யம் கலந்து விறுவிறுப்பாக நகர்த்தி கவனம் பெறுகிறார் இயக்குனர் ஆதித்யா. பெண்களை தவறாக சித்தரிக்க வாய்ப்புள்ள கதையில் அவர்களின் கண்ணியத்தை காப்பாற்றுவதில் போராடி ஜெயித்திருக்கிறார்.