அன்பு மகளே... பவதாரணி குறித்து இளையராஜா உருக்கமான பதிவு
இசை உலகில் பவதாரணி தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை கொண்டிருப்பவர்.
சென்னை,
நடுத்தர குடும்பத்தில் பிறந்து தனக்கென தனி இடத்தை திரைத்துறையில் பிடித்தவர் இளையராஜா. நீண்ட காலம் தமிழ் சினிமா ரசிகர்களை வேறு இசையமைப்பாளரிடம் செல்லாத வகையில் தன்னுடைய இசையால் கட்டிப்போட்டவர் இளையராஜா. 'இசைஞானி' என்று போற்றப்படும் அவரது மகள் பவதாரிணியும் இசை உலகில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை கொண்டிருப்பவர்.
பவதாரிணி, தன்னுடைய மெல்லிய குரல் வளத்தால் இளசுகளை கட்டி போட்டவர். இளையராஜாவின் இசையில் ராசையா படத்தில் இடம் பெற்று இருக்கும் மஸ்தானா... மஸ்தானா... பாடல் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானவர். தன்னுடைய திரை இசை பயணத்தின் தொடக்கம் முதலே தந்தை இளையராஜா, அண்ணன் கார்த்திக் ராஜா, தம்பி யுவன் ஷங்கர் ராஜா இசையில் பயணித்தவர்.
காதலுக்கு மரியாதை படத்தில் இன்றும் இளசுகளால் ரசிக்கப்படும் 'என்னை தாலாட்ட வருவாளா' என்ற பாடல் பவதாரணிக்கு கைவசமாக அமைந்த பாடல் என்றே சொல்லலாம். இளையராஜா இசையில் வெளியான பாரதி படத்தில் 'மயில் போல பொண்ணு ஒன்னு' என்ற பாடல் அவருக்கு தேசிய விருது வாங்கி கொடுத்தது. தன்னுடைய குரலின் தனி தன்மையே பவதாரணியை தனியாக அடையாளப்படுத்தும். அழகி படத்தில் அவர் பாடிய 'ஒளியிலே தெரிவது தேவதையா' பாடல் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.
இந்நிலையில் 47 வயதாகும் பவதாரிணி கடந்த 5 மாதங்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த பவதாரிணி ஜனவரி 25ம் தேதி மாலை 5.30 மணி அளவில் காலமானார். விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்ட பவதாரிணியின் உடல் சென்னை தி.நகரில் உள்ள இளையராஜா வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதன்பின்னர் சொந்த ஊரான தேனிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்படவுள்ளது.
இந்த நிலையில் தனது மகளுடன் இருக்கும் இளம் வயது புகைப்படத்தை இளையராஜா தனது 'எக்ஸ்' தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பவதாரிணி சிறுமியாக இருந்தபோது எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்துடன் "அன்பு மகளே" என்ற உருக்கமான வார்த்தைகளை பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து ரசிகர்கள் இளையராஜாவுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.