டேனியல் பாலாஜியின் திடீர் மரணம் அதிர்ச்சியளிக்கிறது - கமல்ஹாசன்
டேனியல் பாலாஜியின் உடலுக்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சென்னை,
கமல்ஹாசன் கதாநாயகராக நடித்த வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் டேனியல் பாலாஜி (வயது 48). இவர் பொல்லாதவன், காக்க காக்க, பைரவா உள்பட பல்வேறு படங்களில் நடித்திருந்தார்.
இந்நிலையில், நடிகர் டேனியல் பாலாஜிக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் டேனியல் பாலாஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். டேனியல் பாலாஜி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மறைந்த டேனியல் பாலாஜியின் உடல் அஞ்சலிக்காக சென்னை புரசைவாக்கம் வரதம்மாள் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு உள்ளது. அங்கு அவரது உடலுக்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
தம்பி டேனியல் பாலாஜியின் திடீர் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. இளவயது மரணங்களின் வேதனை பெரிது. பாலாஜியின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கண் தானம் செய்ததனால் மறைந்த பின்னும் அவர் வாழ்வார். ஒளியை கொடையளித்துச் சென்றிருக்கும் பாலாஜிக்கு என் அஞ்சலி என்று பதிவிட்டுள்ளார்.