சைபர் கிரைம் மோசடி: விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட நடிகை சனம் ஷெட்டி
நடிகை சனம் ஷெட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சைபர் கிரைம் மோசடி குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை,
மாடல் அழகியான சனம் ஷெட்டி தமிழில் 'அம்புலி, வால்டர், விலாசம், தகடு, சதுரம் 2' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். இவர் தற்போது மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இதற்கிடையில் நடிகை சனம் ஷெட்டி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏமாற்று நபர்களின் தொலைப்பேசி அழைப்பால் தான் மிரட்டப்பட்டதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தன்னுடைய தொலைப்பேசி எண்ணுக்கு அழைத்த ஏமாற்று நபர்கள் மும்பையில் இருந்து பேசுவதாக கூறினார். பின்னர் உங்கள் தொலைப்பேசி எண்ணில் இருந்து பல்வேறு தவறுகள் நடந்திருப்பதாக கூறி, உங்கள் தொலைப்பேசி எண் 2 மணி நேரத்தில் தடை செய்யப்பட உள்ளது என்றனர், அதன் பின்னர் உடனடியாக முகவரி உள்ளிட்ட தகவல்களை தரும்படி கூறி என்னை மிரட்டினர். ஆனால் நான் எச்சரிக்கையாக இருந்ததால் எந்த தகவலையும் தரவில்லை என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
இது போல் யாரேனும் அழைத்தால் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். தனக்கு தெரிந்த ஒருவர் இது போன்றவர்களால் ஏமாற்றப்பட்டுள்ளார். ஆதனால் நாம் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நம் அழைப்புகள் மற்றும் இணையதள தகவல்களை யாரிடமும் பகிர வேண்டாம் மற்றும் சந்தேகத்திற்கிடமான லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்று சைபர் கிரைம் மோசடி குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.