நகைச்சுவை படத்தில் நாயகனாக ஷிகர் தவான்


நகைச்சுவை படத்தில் நாயகனாக ஷிகர் தவான்
x

கிரிக்கெட் துறையில் இருந்து கதாநாயகனாக மாறியிருக்கிறார், ஷிகர் தவான். இவரது நடிப்பில் சத்தமின்றி உருவாகி வந்த ‘டபுள் எக்ஸ்.எல்.’ என்ற திரைப்படம் நவம்பர் 4-ந் தேதி வெளியாக இருக்கிறது.

கிரிக்கெட் வீரர்கள், சினிமா நாயகர்களாக மாறுவது, நடிகைகளை கிரிக்கெட் வீரர்கள் திருமணம் செய்வது, கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்குவது என்று, கடந்த சில வருடங்களாக இந்திய கிரிக்கெட்டும், இந்திய சினிமாவும் பிரிக்க முடியாத ஒன்றாக மாறியிருக்கிறது. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் டோனியின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டது. முதன் முதலாக இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்ற நிகழ்வை வைத்து, '83' என்ற படம் உருவானது. வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், இர்பான்பதான் போன்றவர்கள் நாயகர்களாக மாறினர்.

அந்த வரிசையில் கிரிக்கெட் துறையில் இருந்து கதாநாயகனாக மாறியிருக்கிறார், ஷிகர் தவான். 36 வயதான இவர், கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடியவர். அதன் மூலம் 2010-ம் ஆண்டு இந்திய அணியில் இடம் பிடித்து, கடந்த 12 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். சமீபத்தில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு, வெற்றி வாகையும் சூடினார்.

இவரது நடிப்பில் சத்தமின்றி உருவாகி வந்த 'டபுள் எக்ஸ்.எல்.' என்ற திரைப்படம் நவம்பர் 4-ந் தேதி வெளியாக இருக்கிறது. ஷிகர் தவான் ஜோடியாக, தமிழில் 'காலா', 'வலிமை' படங்களில் நடித்த ஹூமா குரைஷி நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் மூலமாக தமிழ் திரைப்பட நடிகரான மகத் ராகவேந்திரா, பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.

முழு நீள காமெடி படமாக உருவாகும் இந்தப் படத்தை, சட்ரம் ரமணி என்பவர் இயக்குகிறார். படம் பற்றி ஷிகர் தவான் கூறுகையில், "காமெடிப் படமாக இருந்தாலும், படத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்து, ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சமூகத்துக்கு அழகான, அவசியமான செய்தியைக் கொடுக்கும் கதைக்களம் என்பதால்தான் இதில் நடிக்க சம்மதித்தேன்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story