சினிமா கேள்வி-பதில்கள் - குருவியார்


சினிமா கேள்வி-பதில்கள் - குருவியார்
x

உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. சினிமா கேள்வி-பதில்கள், தினத்தந்தி, 86, ஈ.வி.கே. சம்பத்சாலை, வேப்பேரி, சென்னை -600007, வாட்ஸ் அப் எண்: 7824044499, மின்னஞ்சல்: cinema@dt.co.in

கேள்வி: சிவகார்த்திகேயனும், விஜய் சேதுபதியும் இணைந்து நடிப்பார்களா? (சூர்ய மாணிக்கம், பரமக்குடி, ராமநாதபுரம்)

பதில்: காலம் கனியும் போது நடக்கலாம். சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படத்தில் வரும் 'வீரன்' கதாபாத்திரத்துக்கு பின்னணி குரல் கொடுத்தவரே விஜய் சேதுபதி தானே..!

கேள்வி: 'பராசக்தி'யில் நடிக்க சிவாஜி கணேசனுக்கு எதிர்ப்பு வந்தது என்கிறார்களே, உண்மையா குருவியாரே? (எம்.முருகவேல், திருத்தணி)

பதில்: 'ஒல்லியாக இருக்கிறாரே...' என்று சிலர் எதிர்ப்பு தெரிவித்தார்களாம். தயாரிப்பாளர் பெருமாள் பிடிவாதத்தால் தான் கதாநாயகனாக சிவாஜி நடிக்க முடிந்தது. கே.ஆர்.ராமசாமியை அந்த வேடத்தில் நினைத்து வைத்திருந்தார் களாம்!

கேள்வி: அஞ்சலி ஏன் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்? (கவியரசு, மணப்பாறை)

பதில்: மனம் கவர்ந்தவர் யாரும் இதுவரை மாட்டவில்லையாம். மாட்டினால், 'டும்... டும்... டும்...' தானாம்!

கேள்வி: கோவை சரளா எத்தனை படங்களில் நடித்துள்ளார்? (கார்வேந்தன், கும்பகோணம்)

பதில்: 40 ஆண்டு கால திரை வாழ்க்கையில் 800-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்!

கேள்வி: 'காபி குடிக்க கூப்பிடும் ஆண்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்', என்று பூனம் பாஜ்வா சொல்லி இருக்கிறார். நான் டீ குடிக்க கூப்பிட்டால் வருவாரா? (கோ.பாலு, புரசைவாக்கம்)

பதில்: அப்போதும் வரமாட்டார். பால் பொருட்களில் கை வைக்க அவருக்கு பிடிக்காதாம். அப்படி ஒரு 'டயட்'டாம்!

கேள்வி: ரஜினி, விஜய் ஆகிய இருவரையும் இணைத்து படம் இயக்க ஆசை உள்ளது என நெல்சன் கூறியுள்ளாரே... (ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு)

பதில்: உஷாராகி விட்டார்!

கேள்வி: சினிமா பாடல்களில் கதாநாயகிகளை பெரும்பாலும் மலருடன் ஒப்பிட்டு எழுதுவது ஏன்? (வி.என்.சுந்தரேசன், கொடைக்கானல்)

பதில்: வாசம் பிடிக்கத்தான்..!

கேள்வி: இப்போதைய நடிகைகள் பலர் தங்கள் உதடுகளை பெரிதுபடுத்திக் கொள்கிறார்களே... ஏன் குருவியாரே? (சி.அறிவழகன், வெளிச்சநத்தம்)

பதில்: 'முத்தக்காட்சிகளுக்கு தயார்', என்பதை சூசகமாக சொல்கிறார்களோ, என்னவோ..!

கேள்வி: சமந்தாவுக்கு நன்றாக தெலுங்கு பேசத் தெரியுமா? (ஆர்.மாலதி, திருச்செந்தூர்)

பதில்: தெரியும் தான். ஆனாலும் திரையில் அவருக்கு குரல் கொடுப்பது பின்னணி பாடகி சின்மயி!

கேள்வி: நகைச்சுவை நடிகர் சந்திரபாபு அறிமுகமான படம் எது? (ஜோதிபாசு, காரைக்குடி)

பதில்: தன அமராவதி (1947)!

கேள்வி: 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் 2-ம் பாகம் வெளியாகுமா? (தீனதயாளன், ஸ்ரீவில்லிபுத்தூர்)

பதில்: 'நிச்சயம் எடுப்பேன்' என்று செல்வராகவன் கூறியுள்ளாரே..!

கேள்வி: 'புஷ்பா-2' படத்தில் சமந்தாவுக்கு பதிலாக கவர்ச்சி குத்தாட்டம் போட இருப்பது யார்? (ஆசைத்தம்பி, விழுப்புரம்)

பதில்: இளம் தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா பெயர் அடிபடுகிறது. கவர்ச்சி சற்று தூக்கலாக இருக்குமாம்!

கேள்வி:- 'ஆஸ்கார்' நாமினேசனுக்கு சென்ற முதல் மலையாள படம் எது? (எஸ்.முருகன், தேனி)

பதில்: மோகன்லால் நடிப்பில் 1997-ம் ஆண்டு வெளியான 'குரு'.

கேள்வி: 'அவள் ஒரு தொடர்கதை', 'அவர்கள்' போன்ற படங்களில் நடித்த லீலாவதி என்ன செய்கிறார்? (ரேவதி மாணிக்கம், சிவகங்கை)

பதில்: 86 வயதாகும் அவர், கர்நாடகாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஓய்வு நேரத்தை விவசாய பணிகளில் செலவிடுகிறாராம்!

கேள்வி: தமன்னாவின் அழகுக்கு அழகு சேர்ப்பது எது? (விஜயராஜ், நெல்லை)

பதில்: எடுப்பான இடுப்பு தான்!


Next Story