கத்தியால் குத்தி காசாளர் கொலை-வாலிபர் கைது
ஜவுளிக்கடையில் பணம் எண்ணுவதில் ஏற்பட்ட மோதலில் கத்தியால் குத்தி காசாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
எலகங்கா:-
ஜவுளி கடை
பெங்களூரு எலகங்கா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஜவுளிகடை ஒன்று உள்ளது. இந்த கடையில் மல்லிகார்ஜுனா(வயது 24) மற்றும் ராஜரத்னா(25) ஆகியோர் காசாளராக வேலை செய்து வந்தனர். கடையில் வேலை செய்யும்போது அவர்களுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. குறிப்பாக கடையில் வசூலிக்கப்படும் பணத்தை எண்ணும் பணியின்போது அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர்கள் 2 பேரும் வழக்கம்போல் கடையில் வேலை செய்து கொண்டிருந்தனர். பின்னர் அவர்கள் பணியை முடித்துவிட்டு வெளியே புறப்பட்டனர்.
அப்போது அவர்களிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ராஜரத்னா தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு, மல்லிகார்ஜுனாவின் மார்பில் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் மல்லிகார்ஜுனா சரிந்து விழுந்தார். மேலும் உயிருக்கு போராடினார். இதையடுத்து ராஜரத்னா அங்கிருந்து தப்பி சென்றார். ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
குத்தி கொலை
இதுகுறித்து உடனடியாக எலகங்கா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் விசாரணை நடத்தினர். அப்போது ஜவுளி கடையில் வசூலிக்கப்படும் பணத்தை எண்ணுவது தொடர்பாக மோதல் ஏற்பட்டதும், அதன் விளைவாக மல்லிகார்ஜுனா குத்தி கொலை செய்யப்பட்டதும் தெரிந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதன்பேரில் ராஜரத்னாவை போலீசார் கைது செய்துள்ளனர்.