விஜய் மக்கள் இயக்கம் அடுத்தக்கட்ட பரிமாணத்திற்கு தயாராக வேண்டியிருக்கலாம் -புஸ்ஸி ஆனந்த்


விஜய் மக்கள் இயக்கம்  அடுத்தக்கட்ட பரிமாணத்திற்கு தயாராக வேண்டியிருக்கலாம் -புஸ்ஸி ஆனந்த்
x
தினத்தந்தி 26 Aug 2023 2:24 PM IST (Updated: 26 Aug 2023 2:53 PM IST)
t-max-icont-min-icon

அடுத்தக்கட்ட பரிமாணத்திற்கு தயாராக வேண்டியிருக்கலாம் என ஐடி விங் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசினார்.

சென்னை

விஜய் மக்கள் இயக்கத்தின் ஐடி விங் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை பனையூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏராளமான மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய புஸ்ஸி ஆனந்த் கூறியதாவது:-

31 வருடங்களுக்கு முன் ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டது. 15 ஆண்டுகளுக்கு முன் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டது. இனி வரும் காலங்களில் விஜய் மக்கள் இயக்கம் அடுத்தக்கட்ட பரிமாணத்திற்கு தயாராக வேண்டியிருக்கலாம். அதற்கு ஏற்றவகையில் செயல்படும் நோக்கில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது.

விஜய் மக்கள் இயக்கத்தின் கீழ் உள்ள பல்வேறு அணிகளின் ஒவ்வொரு தொகுதியிலும் தலா 30,000 நிர்வாகிகள் நியமிக்கப்பட திட்டமிடப்பட்டு உள்ளது. இளைஞர்களிடையே பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

தமிழகத்தில் சமூக ஊடகங்களால் புரட்சி ஏற்பட்டதை ஜல்லிக்கட்டு மெரினா போராட்டத்தை எடுத்துக்காட்டாக கூறலாம். அந்த வகையில் மற்ற ஊடகங்களை விட சமூக ஊடகங்களின் செல்வாக்கு மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

அரசியல் தளத்தில் சமூக ஊடகங்கள் மூலம் நடக்கும் பிரசாரங்கள் மக்களிடையே எளிதில் சென்றடைகின்றன. தற்போது மக்கள் இயக்கத்தின் கீழ் 1600க்கும் மேற்பட்ட வாட்ஸ் அப் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட இயக்க உறுப்பினர்கள் தகவல் பரிமாற்றம் செய்கின்றனர். தமிழக மக்களுக்கும் விஜய் மக்கள் இயக்கத்துக்குமான தொடர்பை வலுப்படுத்த தகவல் தொழில்நுட்ப அணியை பலப்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது.

விஜய் மக்கள் இயக்கத்தில் இருப்பவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டால் அதனை லைக் ஷேர் செய்து மில்லியன் கணக்கில் தாண்ட வைக்க வேண்டும். மக்கள் இயக்கத்தில் இருக்கும் நிர்வாகிகள் யாரை சமூக ஊடகங்களில் பின்தொடர வேண்டும் என்பதை நெறிமுறைகளின் அடிப்படையில் பின்பற்ற வேண்டும்.

சமூக வலைதளங்களில் பதிவிடும்போது கருத்துகள் ரீதியான பதிலாக இருக்க வேண்டும். எந்த பதிவும் தரம் தாழ்ந்தோ, ஆபாச வார்த்தைகளோ, வன்முறையை தூண்டும் வகையிலோ பதிவுகள், பதில்கள் இருக்கக் கூடாது" என கூறினார்.


Next Story