படிக்க ஆர்வமாக இருந்தேன்...நான் பள்ளி செல்லாமல் போனதற்கு காரணம் பாக்யராஜ் - நடிகை பானுப்ரியா
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பானுப்ரியா தன்னுடைய 17 வயதிலேயே நடிக்க வந்துவிட்டார்.
சென்னை,
1980-களிலும், 90களிலும் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பானுப்ரியா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் போன்ற பிறமொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை பானுப்ரியா, நடனத்திலும் சிறந்து விளங்கினார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பானுப்ரியா தன்னுடைய 17 வயதிலேயே நடிக்க வந்துவிட்டார். தமிழில் அவர் அறிமுகமான படம் 1983ம் ஆண்டு வெளியான 'மெல்ல பேசுங்கள்' திரைப்படம்.
இவர், கடந்த 1998-ம் ஆண்டு ஆதர்ஷ் கவுஷல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அபிநயா என்கிற மகளும் உள்ளார். இவர் கடைசியாக தமிழில் பாண்டிராஜ் இயக்கிய கடைக்குட்டி சிங்கம் மற்றும் அசோக் செல்வன் நடித்த சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற படங்களில் நடித்திருந்தார்.
இந்தநிலையில், இயக்குநர் மற்றும் நடிகர் பாக்யராஜ் குறித்து பானுப்ரியா தன்னுடைய அனுபவம் ஒன்றை பகிர்ந்து இருந்திருந்தார். இந்த தகவல் தற்போது சமூகவலைதளங்களில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
நடிகர் பாக்யராஜ், பானுப்ரியாவின் நடனத்தை பார்த்து அவரை தன்னுடைய படத்தில் நடிக்க வைக்க அணுகியுள்ளார். அப்போது பானுப்ரியா பள்ளியில் படித்து கொண்டு இருந்தார். பானுப்ரியாவை போட்டோ ஷுட் செய்து பார்த்த பாக்யராஜ், அவர் எதிர்பார்க்கும் கதாபாத்திரத்தை விட பானுப்ரியா இளமையாக இருப்பதாக உணர்ந்ததால் அவரை அப்படத்தில் இருந்து நீக்கியுள்ளார்.
அதற்கு முன்னரே பள்ளி முழுவதும் தான் பாக்யராஜ் படத்தில் நடிக்க போவதாக சொல்லி இருந்த பானுப்ரியாவுக்கு அவர் படத்தில் இருந்து வெளியேற்றபட்டது மிகுந்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த தகவல் பள்ளியில் உள்ள அனைவருக்கும் தெரிய வரவே பானுப்ரியாவின் நண்பர்கள் அனைவரும் அவரை பயங்கரமாக கிண்டல் கேலி செய்துள்ளனர். அதனால் பானுப்ரியா பள்ளி செல்வதையே நிறுத்திவிட்டாராம். படிக்க ஆர்வமாக இருந்தேன் என்றார். பெரும் போராட்டங்களுக்கு பிறகு தான் 1983ம் ஆண்டு அவருக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
தற்போது பானுப்ரியா தன்னுடைய தாய் மற்றும் சகோதரருடன் வசித்து வருகிறார். அவரின் மகள் லண்டனில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். கணவர் இறந்த பிறகு மனதளவிலும் உடல் அளவிலும் வலிமை இழந்த பானுப்ரியாவுக்கு நடனத்தின் மீது இருக்கும் ஆர்வம் கூட கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகிறது என தெரிவித்து இருந்தார். மீண்டும் பானுப்ரியாவை திரையில் பார்க்க அவரின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.