நடிகை மனிஷா பாலியல் புகார்: இயக்குனர் சீனு ராமசாமி கேட்ட 6 கேள்விகள்...!


நடிகை மனிஷா பாலியல் புகார்: இயக்குனர் சீனு ராமசாமி கேட்ட 6 கேள்விகள்...!
x
தினத்தந்தி 25 Nov 2023 8:49 PM IST (Updated: 26 Nov 2023 2:32 PM IST)
t-max-icont-min-icon

நடிகை மனிஷா விவகாரதில் இயக்குனர் சீனு ராமசாமி 6 கேள்விகள் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை ஆகிய வெற்றிப் படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குனர் சீனு ராமசாமி. இவர் இயக்கத்தில் இறுதியாக வெளியான 'மாமனிதன்' விமர்சகர்கள் இடையே நல்ல பெயரைப் பெற்றது.

இதற்கிடையே நடிகை மனிஷா யாதவுக்கு இயக்குனர் சீனு ராமசாமி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் யூடியூப் சேனலில் பத்திரிக்கையாளர் ஒருவர் குற்றம் சாட்டியிருந்தார். இது சமூகவலைத்தளங்களில் பேசுபொருளானது.

அவர், 'இடம் பொருள் ஏவல் படத்தின் படப்பிடிப்பின் போது கொடைக்கானலில் தினமும் மனிஷா யாதவுக்கு சீனு ராமசாமி பாலியில் ரீதியாக தொல்லை கொடுத்தார். தொல்லை தாங்க முடியாமல் அந்த படத்தில் இருந்து மனிஷா விலகினார். அந்த சம்பவத்திற்கு பின்பு மனிஷா சினிமா துறையிலிருந்து விலகிக்கொண்டார்' என தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவம் குறித்து நடிகை மனிஷா, '"நான் எங்கே சீனு ராமசாமியின் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்? முதன்முறையாக இதையெல்லாம் கேட்கிறேன். ஒரு குப்பை கதை ஆடியோ லான்ச் நிகழ்ச்சி ஸ்டேஜில் அவர் இருந்ததால் மட்டுமே எல்லோருக்கும் சொல்வது போல அவருக்கும் நன்றி சொன்னேன். எதுவும் மாறிவிடாது.

9 வருடங்களுக்கு முன் நான் சொன்ன வார்த்தைகள் மட்டுமே உண்மை. என்னை மரியாதை குறைவாக நடத்திய ஒருவரோடு நான் ஏன் பணிசெய்ய வேண்டும்?' என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த பாலியல் சர்ச்சை குறித்து இயக்குனர் சீனு ராமசாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் 6 கேள்விகள் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் அந்த பதிவில் :-

சில கேள்விகள் பிளாஷ் பேக்

1) இடம் பொருள் ஏவல் படப்பிடிப்பிற்கு வந்த முதல் நாள் ஏன் முதல் ஷாட்டில் 28 டேக் வாங்கினார் மணிஷா,

2) படப்பிடிப்பு தளத்தில் உதவிட வந்த மூத்த நடிகையர் வடிவுக்கரசி அவர்களிடம் கோபித்து கடுஞ்சொல் வீசினாரே ஏன்?

3) விஷ்ணு விஷால் ஜோடியாக நடியுங்கள் என நானும் அண்ணாமலை பிலிம்ஸ் கணேஷ் அவர்களும் கேட்ட பொழுது ஏன் மறுத்தார் ?

4) என் சம்பளத்தில் ஒரு லட்சம் நஷ்ட ஈடாக பெற்றாரே ஏன்..?

5) மூன்று நாட்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தந்த ஹோட்டலில் தன் தாயாருடன் தங்கியிருந்த மனிஷா அவர்களை கடைசி ஒரு நாள் காலையில் படப்பிடிப்பில் சந்தித்தேன்.

6) அந்த 28 டேக் மேக்கிங் வீடியோவுக்கு காத்திருக்கிறேன். இருப்பினும் உங்களோடு திரும்ப பணி புரிய விரும்பினேன்.

என்று அவர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி இருந்தார்

மேலும் அவர், 'நவீன லட்சுமி காந்தன் பிஸ்மி அவர்களுக்கு அண்ணன் பிஸ்மி ஒவ்வொரு நாள் தன் பேச்சை எனக்கு அனுப்புவார். ஒரு பூ வாட்ஸ்சப்பில் அவருக்கு போடுவேன் கடைசியில் மலர் அஞ்சலி எனக்கு வைக்க முயல்வார் என நான் எதிர்ப்பார்க்கவில்லை.

மாமனிதன் பெற்ற விருதுகளை பிண அலங்காரம் என வசை பாடியது எனக்கு வலித்தது, மாமனிதன் உலகம் போற்றிய ஒரு சினிமா, அதனால் உங்களை ஒருமையில் எழுதி விட்டேன். ஏன் கடந்த ஒன்னரை வருடமாக என்னை டார்க்கெட் செய்து வலை பேச்சில் 20 வீடியோ பேசினீர்கள் பிஸ்மி அண்ணா?

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மூலமாக பேசி பின் நானே அண்ணே என்னை நெகட்டிவா சொல்ல வேண்டாம் என கெஞ்சிய வாய்ஸ் நோட்ஸ் அனுப்பினேன் மூன்று மாதம் முன்பு. ஆண்களை படத்தில் நீக்கினால் சிறந்த டைரக்டர் அதுவே பெண்களை நீக்கினால் பாலியல் பழியா?

உங்கள் மனைவியார் என் வீட்டுக்கு புகைப்பட கலைஞரோடு வந்து என் அம்மாவை பேட்டி எடுத்தாங்க என்னையும் என் அம்மாவையும் இணைத்து படமும் எடுத்தாங்க அந்த பேட்டியை நன்றியோடு என்றும் நினைப்பேன்' என்று பதிவிட்டுள்ளார்.


Next Story